இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையில், இதுவரை, 60 ஆயிரம் இடங்கள்
நிரம்பியுள்ளன. இன்னும், 21 நாட்களில், மேலும், 50 ஆயிரம் இடங்கள்
நிரம்பினாலும், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், 560 பொறியியல்
கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும்
கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், அரசு
ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது.
பெரும்பான்மை மாணவர் பங்கேற்கும் பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த மாதம்,
21ம் தேதி முதல் அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. அகில இந்திய
தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), "நடப்பு கல்வியாண்டில், பி.இ.,
முதலாம் ஆண்டு வகுப்புகள், நாடு முழுவதும், ஆகஸ்ட், 1ம் தேதி துவங்க
வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
அதனால், கலந்தாய்வு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம்
வரை, 59,488 இடங்கள் நிரம்பி உள்ளன. அண்ணா பல்கலை கல்லூரிகள், பல்கலை
உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில்
இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
இதுவரை நிரம்பிய இடங்களில், அதிகபட்சமாக, பொதுப்பிரிவில், 27,454 பேர்;
பி.சி., பிரிவில், 15,547 பேர்; எம்.பி.சி., பிரிவில், 10,230 பேர்;
எஸ்.சி., பிரிவில், 4,014 பேர்; எஸ்.டி., பிரிவில், 113 பேர்
சேர்ந்துள்ளனர். இன்னும், 1.38 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
எஸ்.சி., பிரிவில், 25,672 இடங்களும், எஸ். டி., பிரிவில், 1,826
இடங்களும் காலியாக உள்ளன; தனியார் கல்லூரிகளில் மட்டும், 1.36 லட்சம்
இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இம்மாதம், 31ம் தேதியுடன், கலந்தாய்வு முடிய
உள்ளது.
இதற்குள், மேலும், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இடங்கள் நிரம்பலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் இடங்கள் வரை,
காலியாக இருக்கும் என, பல்கலை வட்டாரம் எதிர்பார்க்கிறது.
கடந்த ஆண்டு, 50 ஆயிரம் இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை. இந்த ஆண்டு,
புதிய கல்லூரிகள் வரவு மற்றும் குறிப்பிட்ட கல்லூரிகளில், குறிப்பிட்ட
பாடப்பிரிவுகளில், இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், கலந்தாய்வு
இடங்களின் எண்ணிக்கை, 2 லட்சமாக அதிகரித்தது.
இதன் காரணமாக, காலியிடங்களின் எண்ணிக்கையும், கணிசமாக உயரும் நிலை
ஏற்பட்டுள்ளது. பி.இ., படிப்பை முடித்தாலும், வேலை வாய்ப்பிற்கு ஏற்ற திறனை
மாணவர்கள் பெறாதது, பெரிய குறையாக உள்ளது.
இந்த பிரச்னையை போக்க, நடப்பு கல்வி ஆண்டு முதல், ஆங்கில தகவல் தொடர்பு
திறனை மேம்படுத்தவும், கணிதம் மற்றும் அறிவியலில், சிறப்பாக கல்வி
பயில்வதற்கான ஏற்பாடுகளையும், அண்ணா பல்கலை செய்துள்ளது. இது, எந்த
அளவிற்கு பலனை கொடுக்கும் என்பது, வரும் ஆண்டுகளில் தெரியும்.
No comments:
Post a Comment