ஒரு வேலையை தடையின்றி, குறித்த நேரத்தில் செய்வதற்கு, நேரத்தை
நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தை எப்படி
செலவழிப்பது என்பது பற்றி அறிந்து கொண்டால், பெரும்பாலும் நமக்கு
ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.
பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்கள், நேரத்தை ஒழுங்காக திட்டமிடுவதில்லை. குறிப்பாக, கல்லூரி
வளாக நேர்காணலில், மாணவர்களின் நேர நிர்வாகத்தை பற்றி பரிசோதிக்க,
தேர்வாளர்கள் சில கேள்விகளை கேட்பர். உதாரணமாக, எப்படி நேரத்தை
நிர்வகிக்கிறீர்கள் எனக் கேட்டு உங்கள் ஆளுமைத் தன்மையை
கண்டுபிடித்துவிடுவர்.
அடுத்து, ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை செல்போனில்
பேசுகிறீர்கள் எனக் கேட்டு, பதிலின் அடிப்படையில் உங்களது நேர நிர்வாகத்
திறனை கணக்கிடுவர்.
தேவையில்லாமல் வரும் டெலிபோன் அழைப்புகள், அவசியம் இல்லாமல்
சந்திக்கும் நபர்கள், தெளிவில்லாத தகவல் தொடர்புகள், "என்னால் முடியாது"
என்று நேரடியாக சொல்ல முடியாததால் ஏற்படும் தயக்கம், திட்டமிடாத
செயல்பாடுகள் போன்றவை, நேரத்தை வீணாக்கும் முக்கிய காரணிகள்.
இவற்றை தெளிவாக தெரிந்து கொண்டவர்கள், எந்த செயலுக்கு
முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு, சிறந்த
முறையில் நேரத்தை நிர்வகிப்பர். மேலும், படிக்கும் போதே எந்த பாடத்திற்கு
எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என திட்டமிட்டு படிக்க ஆரம்பித்தால், மற்ற
செயல்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி நேரத்தை நிர்வகிக்கலாம்.
No comments:
Post a Comment