பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண் பெற்று, பி.இ.,க்கு விண்ணப்பித்த
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 35 சதவீதம்
தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு முடிவடையாததால்,
இந்நிலை ஏற்பட்டுள்ளது.
பி.இ., படிப்பில் சேர,
எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி
பெற்றிருந்தால் போதும் என்ற நிலை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டும்,
பழைய நிலை தொடரும் என, எதிர்பார்த்து, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற
எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியர் ஏராளமானோர், பி.இ., படிப்பில் சேர
விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,),
"இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள், பி.இ., படிப்பில் சேர, பொறியியல்
கல்விக்கான, பிளஸ் 2 பாடங்களில், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண்
பெற்றிருக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை, ஐகோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல்
செய்தது. இந்த வழக்கில், "ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு சரி தான்" என தீர்ப்பு
கூறப்பட்டது. பின், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீட்டு
மனுவை தாக்கல் செய்தது.
கடந்த மே மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பி.இ., படிப்பில்,
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் சேர்வதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு
குறித்து, பல எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவதற்குள், தீர்ப்பு
வந்துவிடும். இதில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பாதிக்கப்பட
மாட்டார்கள்" என உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று முன்தினத்துடன், கலந்தாய்வு முடிந்துவிட்டது. கடைசி வரை,
35 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
நேற்று முன்தினம், 3:30 மணிக்கு, கடைசி, "பேட்ச்" மாணவர்கள்,
கலந்தாய்வுக்கு சென்றனர்.
அப்போது, "கட்-ஆப்" மதிப்பெண், 77.5 மதிப்பெண் வரை இருந்த மாணவர்கள்
மட்டுமே, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பி.இ.,
படிப்பில் சேர, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர்
பிரிவில் இருந்து, பொதுப்பிரிவு, தொழிற்கல்விப் பிரிவு மற்றும் சிறப்பு
பிரிவு என, மூன்று பிரிவுகளிலும் சேர்த்து, 28,327 மாணவர்கள்,
விண்ணப்பித்தனர். ஆனால், 14,958 பேர் மட்டுமே, சேர்ந்துள்ளனர்.
மீதமுள்ள, 13,369 மாணவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால்,
22,632 இடங்கள், காலியாக உள்ளன. புதிய கல்லூரிகள் வருகை, பழைய
கல்லூரிகளில், இடங்கள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், எஸ்.சி., - எஸ்.டி.,
அருந்ததியர் பிரிவு இடங்கள் அதிகரித்துள்ளன.
தமிழக அரசு, 35 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை, பி.இ.,
படிப்பில் சேர அனுமதித்திருந்தால், மேலும், பல ஆயிரம் மாணவர்கள்
சேர்ந்திருப்பர். 35 சதவீத மதிப்பெண்களுடன், எத்தனை மாணவர்கள்
விண்ணப்பித்தனர் என்ற விவரங்களை, அண்ணா பல்கலை வெளியிடவில்லை.
இதுகுறித்து, பல்கலை வட்டாரம் பதிலளிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில்,
சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு முடிவடையாத நிலையில், கலந்தாய்வு
முடிந்ததால், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்
குறித்தும், பல்கலை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment