பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில்,
இதுவரை, ஒரு லட்சம் மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
எனினும், 90 ஆயிரம் இடங்கள், இன்னும் நிரம்பாமல் உள்ளன.
அண்ணா பல்கலையில், கடந்த மாதம்,
21ம் தேதி, பி.இ., சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது. நேற்று முன்தினத்துடன்,
32 நாட்கள் முடிந்துள்ளன. 1.52 லட்சம் மாணவர்கள் அழைக்கப்பட்டதில், ஒரு
லட்சத்து, ஆறாயிரம் மாணவர்கள், கலந்தாய்வில் பங்கேற்று, பல்வேறு
கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 45,758 பேர், கலந்தாய்வுக்கு வராமல்,
"ஆப்சென்ட்" ஆகியுள்ளனர்.
கலந்தாய்விற்கு வந்து, 398 பேர், எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாமல்,
சென்றுள்ளனர். இன்னும், எட்டு நாட்களில், கலந்தாய்வு முடியப் போகிறது.
இந்நிலையில், இன்னும், 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பது, பல்கலை
வட்டாரத்தை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஒவ்வொரு நாளும், சராசரியாக, 2,000 இடங்கள் நிரம்புகின்றன. அதன்படி, 15
ஆயிரம் முதல் 17 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பலாம் என, எதிர்பார்க்கப்
படுகிறது. எனவே, 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் இடங்கள் வரை, இந்த ஆண்டு
காலியாக இருக்கும் என, பல்கலை எதிர்பார்க்கிறது.
பி.சி., - எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., பிரிவுகளில், அதிகளவு இடங்கள்
காலியாக உள்ளன.நேற்று முன்தினம் நிலவரப்படி, ஓ.சி., பிரிவில், 15,349
இடங்கள்; பி.சி., பிரிவில், 25,284; எம்.பி.சி., பிரிவில், 20,605;
எஸ்.சி., பிரிவில், 19,613; எஸ்.டி., பிரிவில், 1,630; எஸ்.சி.,
அருந்ததியர் பிரிவில், 4,651; பி.சி., முஸ்லிம் பிரிவில், 3,861 இடங்கள்
காலியாக உள்ளன.
பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர் பலரும், கலை, அறிவியல்
கல்லூரி பக்கம் திரும்பியது தான், அதிகளவு இடங்கள் காலியாக இருப்பதற்கு
காரணம் என, கூறப்படுகிறது. இளங்கலை படிப்பை முடித்து, பி.எட்., முடித்தால்,
உடனடியாக ஆசிரியர் வேலைக்கு செல்லலாம் என்பது, மாணவர்களின் கருத்தாக
உள்ளது.
பி.எட்., முடிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்து சூட்டோடு சூடாக,
டி.ஆர்.பி., நடத்தும் போட்டித் தேர்வுகளிலும், வெற்றி பெற்று விடுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன் பி.எட்., படித்தவர்களால், டி.இ.டி., தேர்வில்,
வெற்றி பெற முடியவில்லை. ஆனால், புதிதாக படிப்பை முடிப்பவர்கள், தேர்வில்
சாதிக்கின்றனர்.
கல்வித் துறையில், ஆண்டுக்கு, 50 ஆயிரம் பேர் வரை நியமனம்
செய்யப்படுவதால், மாணவர் கவனம், ஆசிரியர் வேலையின் மீது திரும்பியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment