"அரசிடம் நிதி பெறாமல், நடத்தப்படும் தனியார் பள்ளிகளில்,
வசூலிக்கப்படும் கட்டண முறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசுக்கு இல்லை"
என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மத்திய
மும்பையில் செயல்பட்டு வந்த, சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு, மகாராஷ்டிர
மாநில உயர்கல்வி வாரியம் நிதியுதவி அளித்து வந்தது. இது, 2006 -07ம்
ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இப்பள்ளி, அரசு நிதியுதவி பெறாத
தனியார் பள்ளியாக மாற்றப்பட்டது.
இதன்பின், மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு வசதிகள் மற்றும் மாணவர்கள்
தனி ஆர்வத்தை வளர்த்து கொள்ளும் வகையில், வசதிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், 2006 -07ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரை, ஐ.சி.எஸ்.இ.,
அனுமதி பெறாததால், மாணவர்கள் சிலரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி
தரும்படி, மகாராஷ்டிர மாநில கல்வித்துறை, கடந்தாண்டு நவ., 17ம் தேதி
உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில், மும்பை ஐகோர்ட்டில், அப்பீல்
தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, விசாரித்த நீதிபதிகள், வஜிப்தார்,
எம்.எஸ்.சோனக் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
அரசு நிதி நிறுத்தப்பட்ட பின், தங்கள் சொந்த நிதியை பெருமளவு செலவு
செய்து, மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை, பள்ளி நிர்வாகம் செய்து
கொடுத்துள்ளது. படிப்பு மட்டும் அல்லாது, மாணவர்களின் தனிப்பட்ட திறமையை
வளர்க்கவும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
நிதி உதவி பெறாத பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டண முறையை, மாற்றி
அமைக்கும்படி கூறவோ அல்லது அதை கட்டுப்படுத்தவோ, மாநில அரசுக்கு உரிமை
இல்லை. இதுதொடர்பாக, மாநில கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து
செய்யப்படுகிறது.
பள்ளி நிர்வாகத்தினர் கெட்ட நோக்கத்துடன் செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
No comments:
Post a Comment