வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு துறைகளில் காலியாக
உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட் காலி
பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி மூலம் போட்டி எழுத்து தேர்வு வரும்
ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் சுமார் 9 லட்சம் பேர்
பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில்
அக்கவுன்டன்சி, சுருக்கெழுத்து தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11ம்
தேதிகளில் ஆரம்பமாகிறது. 24ம் தேதி தமிழ், ஆங்கில பாட ஜூனியர் பிரிவு
டைப்ரைட்டிங் தேர்வுகள், 25ம் தேதி தமிழ், ஆங்கில பாட 5ம் பேட்ஜ் ஜூனியர்
பிரிவு மற்றும் சீனியர் பிரிவு தேர்வுகளும் நடக்கிறது. இத்தேர்வுகளில்
சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் டி.என்.பி.எஸ்.சி
எழுத்து தேர்வு மற்றும் டைப்ரைட்டிங் தேர்வு நடத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் இதில் ஒரு தேர்வை மட்டுமே எழுத முடியும்
என்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டைப்ரைட்டிங் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று
டி.என்.பி.எஸ்.சியும், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் எழுத்து தேர்வை
தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககமும்
போர்க்கொடி தூக்கி வருவதால் இதுவரை தேர்வு தேதி மாற்ற அறிவிப்புகள்
வெளியிடப்படவில்லை. இரு துறைகளின் மோதலால் இத்தேர்வுகளை எழுத தயாராகி வரும்
தேர்வர்கள் கடும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டைப்ரைட்டிங்
தேர்வுக்குரிய சான்றிதழ்கள் இதுவரை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்
தேர்வு எழுதியவர்களுக்கு வழங்காத நிலையில் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள்
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும் சிக்கல் நீடித்து
வருகிறது.
ஏற்கனவே வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் மூலம் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வும், 18ம் தேதி பட்டதாரி
ஆசிரியர் தகுதி தேர்வும் நடக்கிறது.
இதனால் ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழ்,
ஆங்கிலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு, அக்கவுன்டன்சி, ஹைஸ்பீடு
தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்வுகளும் நடப்பதால் தேர்வர்கள் முழு வீச்சில்
இத்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
எனவே, வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி எழுத்து தேர்வு அல்லது டைப்பிஸ்ட்
தேர்வை தள்ளி வைக்கவும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டைப்ரைட்டிங் தேர்வு
சான்றிதழ்களை உடனடியாக தேர்வர்களுக்கு வழங்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment