மாற்றுத் திறனாளிகளுக்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மூன்று இடங்களை
காலியாக வைத்திருக்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு
கிராமத்தைச் சேர்ந்த, நளினி என்பவர் தாக்கல் செய்த மனு: நான் ஒரு மாற்றுத்
திறனாளி. கடந்த மாதம், 18ம் தேதி, எம்.பி.பி.எஸ்.,க்கான கவுன்சிலிங்கில்
கலந்து கொண்டேன். 75 சதவீத ஊனம் இருப்பதாகவும், எனக்கு தகுதியில்லை எனவும்
தெரிவித்தனர்.
மாவட்ட மருத்துவ போர்டு அளித்த சான்றிதழின்படி, 65 சதவீதம் ஊனம் என,
கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட மருத்துவ போர்டு சான்றளித்த பின்,
மீண்டும் மருத்துவக் குழு முன், ஆஜராகக் கூறியது சரியல்ல. எனக்கு, தகுதி
உள்ளது. என்னால், நடக்க, ஓட, முடியும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு என, 54 இடங்கள் உள்ளன. தற்போது, ஒன்பது இடங்கள்
காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பவில்லை என்றால், மற்ற மாணவர்களை
கொண்டு இதை நிரப்பி விடுவர். எனவே, எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம்
ஒதுக்க வேண்டும்.
வழக்கு விசாரணை முடியும் வரை, ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, இரண்டு மாணவர்கள்,
எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கேட்டு, மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி சசிதரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கும் முன், மூன்று இடங்களை, காலியாக
வைத்திருக்க, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment