எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, தேசிய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
மாணவர், பெற்றோர் மத்தியில், இத்தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
"மருத்துவக் கல்வி, மாநில அரசின்
பட்டியலில் உள்ளது. மாநில அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு,
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை, மத்திய அரசு எப்படி நடத்தலாம். இம்முறை,
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல்" என்ற வாதம் முன்
வைக்கப்படுகிறது.
ஆனால், இதை கல்வியாளர்கள் முற்றிலும் தவறு என்கின்றனர். "புற்றீசல்
போல், நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை
எப்படி முறைப்படுத்துவது. போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது.
தகுதி, திறமைக்கு இடமில்லாமல், பணத்தைக் கொண்டு மருத்துவராகி விடுகின்றனர்.
இதனால், சமூகத்துக்கு பேராபத்து எனவும் எச்சரிக்கின்றனர்.
பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலை:
கல்வி, மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மருத்துவக் கல்லூரிகள்
பெரும்பாலும் மாநில அரசினால் நடத்தப்படுபவை. இக்கல்லூரிகள் சேர்க்கைக்கு,
தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது, மாநில அரசின் உரிமையில்
தலையிடுவதோடு, அதிகாரத்தை பறிப்பதாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
இதில் பயின்று வரும் மாணவர்களுக்கு, பொதுவான நுழைவுத் தேர்வை, தேசிய அளவில்
நடத்த வேண்டிய அவசியமில்லை. தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்வி
நிலையங்களை, கட்டுப்படுத்த முடியவில்லை.
அதனால், பொது நுழைவுத் தேர்வு அவசியம் எனக் கூறுவதை ஏற்க முடியாது.
மருத்துவக் கல்வியை முறைப்படுத்த, இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளது.
இதுதவிர, மாநில அரசின் மருத்துவ கல்வி இயக்குனரகம் உள்ளது. இவற்றில் உள்ள
விதிகள் மூலம், தனியார் மருத்துவ கல்லூரிகளை கட்டுப்படுத்த முடியும்.
இதைச் செய்ய மருத்துவக் கவுன்சிலும், மருத்துவ கல்வி இயக்குனரகமும்
தவறுகின்றன. விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தாமல், முறைகேடுகள் பெருகி
விட்டன. அதனால், பொது நுழைவுத் தேர்வு தான் சரி என்ற வாதத்தை ஏற்க
முடியாது.
ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், அந்த மாநிலத்தில் பயின்று,
பணியாற்றவே விரும்புவர். டில்லி, "எய்ம்ஸ்" போன்ற தேசிய கல்வி
நிறுவனங்களில் பயில விரும்புபவர்கள் மிகச் சிலரே. அவர்களுக்கு, தனியாக
நுழைவுத் தேர்வு நடத்தலாம். விரும்புபவர்கள், அத்தேர்வை எழுதி வெற்றி
பெற்று படிக்கலாம்.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு
நடத்த திட்டமிடும், மத்திய அரசின் முடிவு அவசியமற்றது. இதைத் தடுக்கும்
வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்துள்ளது.
நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்: ஒருவர் எம்.பி.பி.எஸ்.,
முடித்து மருத்துவர் ஆனவர் என, சொல்வதற்கு ஒரு ஆதாரம், அரசுக்குத் தேவை.
அதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மிக முக்கியம். இந்த
நுழைவுத் தேர்வு மூலம், மத்திய அரசு, ஒரு கணினி புள்ளி விவரத்தை
சேகரிக்கிறது. நடப்பு, 2013ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தவர்,
2018ம் ஆண்டு அப்படிப்பை முடித்தவர் என்ற தகவலை உறுதிபடுத்த முடியும்.
ஆனால், "நீட்" நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம், மருத்துவக்
கல்வியின் தரம், தகுதி ஆகியன முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளன. தேசிய
அளவிலான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம், தனியார் மருத்துவக்
கல்லூரிகள், தங்கள் விருப்பம் போல, நுழைவுத் தேர்வை இனி நடத்தும்.
நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக, பல
நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எழுத வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம்,
பல ஆயிரம் ரூபாயைத் தாண்டும். மேலும், இந்த நுழைவுத் தேர்வுகள் சிறிய
நகரங்களில் நடத்தப்படுவதில்லை. இதற்காக, பெரு நகரங்களுக்கு செல்ல பெரும்
செலவு ஏற்படும். நடுத்தர குடும்பங்களுக்கு, இத்தொகை பெரும் சுமையாக
இருக்கும்.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், முதல் ஆண்டில் சேரும் பலர்,
தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பட்டத்தை முடிப்பதில்லை. இடையில் படிப்பை
கைவிடுகின்றனர். இதற்கு, கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
இதனால் ஏற்படும் காலியிடங்களில், வேறு ஒருவரை சேர்த்துக் கொண்டு, பட்டத்தை
வழங்குகின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, ஒரு
கருவியாக இருந்தது. அந்த அரண் தற்போது தகர்க்கப்பட்டு உள்ளதால், மருத்துவக்
கல்வியை முறைப்படுத்துவது கேள்விக் குறியாகி உள்ளது.
ரவீந்தரநாத், பொதுச்செயலர், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம்: தமிழகத்தில்,
மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான நுழைவு தேர்வை மட்டும், தமிழக மாணவர் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவக் கல்விக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்
தேர்வை (நீட்) சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதை, வரவேற்கிறோம்.
மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு இருக்குமா, இருக்காதா என தவித்து
வந்த மாணவர் மற்றும் பெற்றோருக்கு, இத்தீர்ப்பு, பெரும் நிம்மதி அளிக்கும்.
நாட்டில், 366 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 196 கல்லூரிகள்,
தனியார் மருத்துவக் கல்லூரிகளாகவும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்
கழகங்களாகவும் உள்ளன. இவற்றுக்கான, நுழைவுத் தேர்வு பற்றி, சுப்ரீம் கோர்ட்
கருத்து எதையும் சொல்லவில்லை.
தனியார் கல்லூரிகளில் தான், மாணவர் சேர்க்கை முறைகேடு, கட்டாய நன்கொடை
ஆகியன அதிகளவு உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல்,
மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், ராணுவ மருத்துவக் கல்லூரிகள், மாநில
அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீடு, டி.என்.பி.,
மருத்துவப் படிப்பு ஆகியவற்றின் சேர்க்கை குறித்து, தீர்ப்பில்
சொல்லப்படவில்லை.
இதேபோல், மருத்துவ முதுகலைப் பட்டப் படிப்பு பற்றியும், கூறப்படவில்லை.
இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவுத் தேர்வு நடத்த
வேண்டும். இவை அனைத்துக்கும் ஒரே நுழைவுத் தேர்வை அனுமதிக்கும் வகையில்,
சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இதற்கு, காலம்
தாழ்த்தக் கூடாது. குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்
சேர்க்கையை, முறைப்படுத்த வேண்டியது அவசர அவசியமாகும்.
பிரவீன், ஒருங்கிணைப்பாளர், மருத்துவக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு:
மருத்துவக் கல்விக்கு சேர, அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத்
தேர்வுக்கான பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பயின்ற மாணவர்களுக்கு எளிதாக
இருக்கும். மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகக் கடினம்.
கிராமப் புறங்களில் பயின்ற மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டுமானால், அதற்கென தனியாக ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.
இதனால், எம்.பி.பி.எஸ்., தேர்ச்சி பெற, கூடுதலாக இரண்டு ஆண்டுகளை செலவிட
வேண்டியுள்ளது.
ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எளிதாக அமைகிறது. இந்நிலையில், மாநில
பாடத் திட்டம், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., போன்ற பல்வேறு பாடத் திட்டங்களை
நீக்கிவிட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்
செய்துவிட்டு, அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்தினால், அனைவருக்கும் சம
வாய்ப்பு கிடைக்கும்.
ஆளுக்கொரு பாடத் திட்டத்தில் படித்து, நுழைவுத் தேர்வை மட்டும், பொதுவாக
நடத்துவது முறையற்றது. எனவே, மருத்துவக் கல்விக்கான, அகில இந்திய நுழைவுத்
தேர்வை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அகில இந்திய
நுழைவுத் தேர்வின் மூலம், மருத்துவக் கல்லூரியில் சேரும் போது, ஒரு
மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு, அதே மாநிலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது
அரிது. இதனால், மொழிப் பிரச்னையை சந்திக்க நேரிடும்.
நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையே, மொழிப் பிரச்னை இருந்தால், இரு
தரப்பினரும் பாதிக்கப்படுவர். மொழி தெரியாமல் சிகிச்சை அளிப்பதால், பெரும்
பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, மாநில அளவில் மருத்துவக் கல்லூரி
சேர்க்கையை முடிவு செய்வதே சிறந்தது.
No comments:
Post a Comment