ஈரோடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில், "தமிழ் பண்பாட்டு
அடையாளம் - ஈரோட்டின் கொடுமணல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு
நடந்தது.
தமிழ் ஆர்வலர்கள்,
அகழ்வாராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் பேசியதாவது: "தமிழர் பண்பாடு,
வரலாறு ஆகியவற்றுக்கு வருங்கால சந்ததியினர் மதிப்பு தர வேண்டும்.
அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர, அரசு நிதியுதவி செய்ய வேண்டும். சங்க
இலக்கியத்தின் உயிராக, கொடுமணல் அகழ்வாராய்ச்சி உள்ளது. வரலாற்று உண்மைகளை,
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஓலைச்சுவடிகள், கல்வெட்டு, செப்பேடு,
கற்திட்டுக்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்பாடங்களில் ஓலைச்சுவடி, கல்வெட்டு உள்ளிட்ட பழங்கால
ஆவணங்கள் குறித்து தனிப்பாடம் அமைத்து, மாணவர்கள் கற்க அரசு பட்ஜெட்டில்
தனியாக நிதி ஒதுக்க வேண்டும். கடந்த, 1985ல் கொடுமணல் அகழ்வாராய்ச்சி
துவங்கி, ஏழு ஆண்டில் கிடைத்த தொல்பொருட்கள், தொல்லியல்துறை உன்னத நிலையை
அடைந்ததை காட்டுகிறது.
கொடுமணல் குறித்து பல்வேறு நூல்களிலும், இலக்கியங்களிலும்,
செப்பேடுகளிலும், பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில்
வாழ்ந்தவர்கள் கி.மு., 400ம் ஆண்டு முதலே கல்மணிகள் செய்தல், இரும்பு
உருக்கி எடுத்தல், நெசவு செய்தல் ஆகிய தொழில்களை செய்துள்ளனர். பச்சைக்கல்,
நீலக்கல், வெள்ளி பளிங்கு கற்கள் இப்பகுதியில் அதிகமாக கிடைத்துள்ளது.
இங்கு கிடைத்த பொருட்களை, புதுப்பித்து அழகிய வடிவில் வெளிநாட்டுக்கு,
தமிழர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்," என்றனர்.
தொடர்ந்து, கொடுமணல் குறித்த அகழ்வாராய்ச்சி காணொளி படங்கள்
காண்பித்து, புதுச்சேரி பல்கலை வரலாற்று துறை பேராசிரியர் ராஜன்
பேசியதாவது: "கொடுமணலில், நாங்கள், ஒரு சதவீத ஆராய்ச்சியே செய்துள்ளோம்.
குறிப்பிட்ட சில சதுர பரப்புக்கு மட்டுமே, ஆராய்ச்சி பணிகளை மாணவர்களோடு
இணைந்து செய்தோம். இதில், தமிழ் பல்கலை, புதுச்சேரி பல்கலையை சேர்ந்த
ஆராய்ச்சி மாணவர்களின் பங்கு அதிகம். இது போன்ற பழங்கால சின்னங்களை
பாதுகாப்பது, நம் கடமை. வருங்கால சந்ததியினர் மேலும் ஆய்வு செய்ய மத்திய,
மாநில அரசுகள் உதவ வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment