தமிழகத்தில் உள்ள, ஒன்பது பல்கலையில், "விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்"
அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில்
இம்மையம் செயல்பாட்டிற்கு வருகிறது.
விவேகானந்தரின், 150வது பிறந்த
நாள் விழாவையொட்டி, சென்னை பல்கலை, மதுரை காமராசர், அழகப்பா, பாரதியார்,
பாரதிதாசன், திருவள்ளூர் உள்ளிட்ட, ஒன்பது பல்கலைக்கழகங்களில், தலா, 25
லட்சம் ரூபாய் செலவில், "விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்" அமைக்கப்படும் என,
தமிழக அரசு அறிவித்தது.
தற்போது, இதற்கான பணி, பல்கலைக்கழகங்களில் விறுவிறுப்பாக நடந்து
வருகிறது. இம்மையத்தின் மூலம், விவேகானந்தர் குறித்து ஆய்வுகளை மாணவர்கள்
மேற்கொள்வர். விவேகானந்தரின் கருத்துகளை, தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல்
உள்ளிட்ட பாடங்களில், இடம் பெற வைக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள
உள்ளனர்.
கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மூலம், விவேகானந்தரின் கருத்துகள்
மாணவருக்கு பயிற்றுவிக்கப்படும். விவேகானந்தர் தொடர்பான, இதழ் துவக்கும்
பணியும் நடக்க உள்ளது. மேலும், விவேகானந்தரை மையப்படுத்தி, பேச்சு,
கட்டுரை, ஓவிய போட்டிகளும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
இதுகுறித்து, துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலைகளில் அமைய உள்ள
விவேகானந்தர் ஆராய்ச்சி மைய பணியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
ஒருங்கிணைக்கிறது. இம்மையத்தை, பல்கலைக்கழகத்தின் கீழுள்ள அனைத்து கல்லூரி
மாணவரும் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் கல்வியாண்டில், இந்த ஆராய்ச்சி
மையம், பயன்பாட்டிற்கு வர உள்ளது" என்றார்.
No comments:
Post a Comment