உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில், முரண்பாடு நிலவுவதால்,
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், போர்க்கொடி தூக்கி
உள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு, அவர்களின் உயர்கல்வி
தகுதி அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
"பட்டதாரி ஆசிரியர்கள், எம்.எட்., - எம்.பில்., - பி.எச்டி., போன்ற
உயர்கல்வி தகுதிகளை பெற்றிருந்தால், அவர்களுக்கு, ஊதிய உயர்வு
வழங்கப்படும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், ஊதிய உயர்வு வழங்குவதில், முரண்பாடுகள் நிலவுவதாக, தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூறுகிறது. இதன் தலைவர் ரைமண்ட் பேட்ரிக்
கூறியதாவது:
முதுகலை ஆசிரியர், உயர்கல்வி தகுதி பெற்றிருந்தால், அவர்கள், எந்த
தேதியில், உயர் கல்வி தகுதியை பெற்றார்களோ, அந்த தேதியில் இருந்து,
"அரியர்ஸ்" வழங்கப்படுகிறது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும்,
உயர் கல்வி தகுதி பெற்ற தேதியை கணக்கிடாமல், "கடந்த ஜனவரியில் இருந்து,
ஊதிய உயர்வு வழங்கப்படும்" என அரசு தெரிவித்து உள்ளது. பட்டதாரி
ஆசிரியர்களுக்கும், "அரியர்ஸ்" வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
இதற்கிடையே, "பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான ஊதிய
உயர்வு வழங்கும் போது, எங்களை மட்டும் புறக்கணிப்பது ஏன்" என, தமிழ்நாடு
உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம், கேள்வி
எழுப்பியுள்ளது.
இந்த அமைப்பின் அறிக்கை: உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்
நிலை - 2, நிலை - 1 ஆகியவற்றில், பதவி உயர்வு பெற வழி இருந்தது. ஆனால்,
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இல்லாமல், கணக்கு தேர்வை காரணம்
காட்டி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உடற்கல்வி ஆசிரியர்களாகவே பணியாற்றி,
ஓய்வு பெற்று வருகிறோம்.
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவும், பட்டதாரி
ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவும், கணித தேர்வு
தேர்ச்சி தேவையில்லை என்று இருக்கும்போது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு
மட்டும், இந்த தேர்வை திணிப்பது, எந்த வகையில் நியாயம்?
அதேபோல், பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், அவர்களின்
உயர்கல்வி தகுதிக்கு தகுந்தார் போல், ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இதிலும், உடற்கல்வி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். உடற்கல்வி
ஆசிரியரில், பலர், எம்.பில்., தகுதி பெற்றிருக்கின்றனர்.
எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உயர் கல்விக்கான ஊதிய உயர்வு விவகாரம், ஆசிரியர்களிடையே, பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும், "அரியர்ஸ்"
வழங்க, பல கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும் என்பதால், என்ன செய்வது என,
தெரியாமல், கல்வி துறை, கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment