மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 5 முதல், 16ம்
தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணையை, மருத்துவக் கல்வி இயக்ககம்
வெளியிட்டு உள்ளது.
மருத்துவப் படிப்பு
விண்ணப்பதாரர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த, எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 5 முதல், 16ம்
தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில்
நடக்கிறது. இதில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்
கல்லூரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முறையே
அதிகரிக்கப்பட்டுள்ள, 85, 100, 25 எம்.பி.பி.எஸ்., இடங்கள், திருவண்ணாமலை
அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ.சி., மருத்துவக்
கல்லூரி ஆகியவற்றின், தலா, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், தனியார் மருத்துவக்
கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டு, மாணவர்
சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ள கல்லூரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
ஆகியவற்றுக்கு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
இதற்கான, "கட் -ஆப்" மதிப்பெண் அடிப்படையிலான கால அட்டவணை, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், ஆக., 1ல் துவங்குவது
வழக்கம். இம்முறை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 16ல் தான் முடிவடைகிறது
என்பதால், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வகுப்புகள் துவங்கும் தேதி, பின் அறிவிக்கப்படும் என, மருத்துவக் கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது.
"பத்து ஆண்டுகளுக்கு மேல், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன் இயங்கி
வரும், அரசு மருத்துவக் கல்லூரிகள், 50 இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்" என
மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதன்படி, திருச்சி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய
இடங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா, 50 எம்.பி.பி.எஸ்.,
இடங்களை உயர்த்திக் கொள்ள, அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, வரும்,
31ம் தேதிக்குள் தெரிந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், திருச்சி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிகளில்,
தலா, 50 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும்
என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment