கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர், கேமரா மொபைல் போன்களை
பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க, மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களின் கருத்துகள் கோரப்பட்டு
உள்ளது.
மொபைல் போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்புக்கு
எளிதாகவும், வசதியாகவும் உள்ளது என்ற ரீதியில், பள்ளி செல்லும் மாணவர்கள்
முதல் அனைத்து தரப்பிலும் லாபித்து உள்ளது.
கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவியர் தங்கள் பாட புத்தகங்களை எடுத்து
செல்ல மறந்தாலும், மொபைல் போன்களை எடுத்து செல்வதற்கு மறப்பதில்லை. அந்த
அளவிற்கு அதனுடன் ஐக்கியம் ஆகிவிட்டனர். இதில், பெரும்பாலும் கேமரா
வசதியுள்ள மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர்.
ஸ்மார்ட் போன்களும் பெருமளவில் வந்துவிட்டன. இந்த மொபைல் போன்களை
பயன்படுத்தி, மாணவியரை ஆபாசமாக படம் எடுத்து, இணையதளத்தில் பரவ விடுவது என,
"சைபர் கிரைம்" குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்து உள்ளன.
இதுதொடர்பான செய்திகள் மீடியாக்களில் வந்ததும், மகாராஷ்டிராவில் தேசிய
மாநாட்டு கட்சியை சேர்ந்த, அசோக் லாட், மாநில உயர்கல்வி துறை அமைச்சர்
ராஜேஷ் தோபேக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், "சைபர் கிரைம்" குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க,
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்திற்குள், கேமரா மொபைல் போன்களை
எடுத்துவர தடைவிதிக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, மாநில உயர் கல்வி துறையின் இணை இயக்குனர், கல்லூரிகளின்
முதல்வர்கள், மும்பை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆகியோருக்கு, மே
மாதம்கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், கல்லூரி மற்றும் பல்கலை வளாகங்களில், கேமரா போன்களுக்கு
தடைவிதிப்பது பற்றி முதல்வர்கள், பேராசிரியர்களின் கருத்துகளை
கேட்டிருந்தார்.மேலும், கேமரா மொபைல் போன்களை செயல் இழக்க செய்யும்
வகையில், கல்லூரி வளாகங்களில், ஜாமர் கருவிகள், டிகோடர்கள் அமைப்பது
பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் இன்னும் இறுதி முடிவு
எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, கல்லூரி முதல்வர்களிடமிருந்து கருத்து பெறப்பட்டதும்,
முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. தற்போது மகாராஷ்டிராவில், கல்லூரிகள்
மத்தியில் இது பற்றிய பேச்சு பரபரப்பாக உள்ளது.
சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும், இது நல்ல முடிவு என, கருத்து
கூறியுள்ளனர். தடைவிதிப்பதை விட, வளாகங்களில், ஜாமர் கருவிகள், டிகோடர்கள்
அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment