பள்ளி நேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு பொதுமக்களின் நலன்
கருதி பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த
திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதேபோன்று, கல்வியின் அவசியம், பொது சுகாதாரம், போக்குவரத்து விதிமுறை,
ரத்ததானம், கண் தானம், காச நோய் ஒழிப்பு, எய்ட்ஸ் பாதிப்பு, பெண்களுக்கு சம
உரிமை, மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பொது
பிரச்னைகளின் மக்களின் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தி வருகிறது.
இதற்காக ஒவ்வொரு துறைக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
அந்தந்த துறை அதிகாரிகள், களப் பணியாளர்கள் மக்களை சந்தித்து ஒவ்வொரு
திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள்
அவ்வாறு செய்யாமல், எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலும் அருகாமையில்
பள்ளி மாணவர்களை அழைத்து வந்து "சம்பிரதாயத்திற்காக" முக்கிய வீதிகளில்
ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்கவும், நிலத்தடி நீர்
ஆதாரத்தை பெருக்கிடும் நோக்கில், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கும்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று மழை நீர் சேகரிப்பு
விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது. இதற்காக மஞ்சக்குப்பம் வேணுகோபாலுபுரம்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப்
பள்ளியிலிருந்து 400 மாணவ - மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியான
செயின்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 250 பேர் நேற்று காலை
8:30 மணிக்கே கலெக்டர் முகாம் அலுவலகம் முன் வரவழைக்கப்பட்டனர்.
காலை 9:30 மணிக்கு வந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர்களை வரிசையில்
நிறுத்தி வைத்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் ரோட்டில்
நின்றிருந்த நிலையில் சரியாக 10:00 மணிக்கு கலெக்டர் கிர்லோஷ்குமார்,
நகராட்சி சேர்மன் சுப்ரமணியன், கமிஷனர் காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள்
புடைசூழ வந்தார்.
காரை விட்டு இறங்கிய கலெக்டர், மாணவர்களின் ஊர்வலத்தை கொடியசைத்து
துவக்கி வைத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு மாணவர்கள் ஒன்றரை
கி.மீ., தூரம் மழைநீர் சேகரிப்பு குறித்து கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று,
சிதம்பரம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் முடித்தனர்.
மாணவர்களுடன் ஊர்வலத்தில் வந்த சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர்வலத்தை
தொடர்ந்து வந்த தங்கள் கார்களில் ஏறி சிட்டாக பறந்தனர். காலை வெயிலில்
ஊர்வலமாக வந்த மாணவர்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் கொடுத்த தண்ணீரை
குடித்துவிட்டு மீண்டும் ஒன்றரை கி.மீ., தூரம் நடந்து 11:30 மணிக்கு தங்கள்
பள்ளிகளுக்கு சென்றனர்.
ஊர்வலமாக சென்ற சோர்வினால், பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை
கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள்
நன்றாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளிக்கு அனுப்பகின்றனர்.
ஆனால், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அதிகாரிகள், அவர்களை
அழைத்து வந்து பல மணி நேரம் காக்க வைத்து ஊர்வலம் நடத்தி அவர்களின் படிப்பை
பாழாக்கி வருவது வேதனையாக உள்ளது.
இதுகுறித்து கடலூரைச் சேர்ந்த வெண்புறா பொதுநலப் பேரவை தலைவர் குமார்
கூறுகையில், "அரசின் எந்த துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் என்றாலும்,
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களை கொண்டு நடத்துவதே
அதிகாரிகள் வழக்கமாக உள்ளனர்.
இதே அரசு பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை
அழைப்பதில்லை. காரணம், தனியார் பள்ளிகளின் அதிகாரிகள் வீட்டு பிள்ளைகள்
படிக்கின்றன. அவர்களின் படிப்பு கெடக் கூடாது. ஆனால், ஏழை மாணவர்களின்
படிப்பு பாழாக்கி வருகின்றனர். இனியும், அதிகாரிகள் திருந்தவில்லை எனில்,
பொதுநல அமைப்புகள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்படும்" என்றார்.
No comments:
Post a Comment