இளங்கலை தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், பல கல்லூரிகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, கல்வி
நிறுவனங்கள் துவங்கியுள்ளது, மாணவர் மற்றும் கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 62 அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 438 சுயநிதி
கல்லூரிகளும் என, 633 கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 40 சதவீத கல்லூரிகள்,
தன்னாட்சி பெற்றவை.
தன்னாட்சி கல்லூரிகளில், கல்லூரி நிர்வாகமே தேர்வுகள் நடத்தி, முடிவுகளை
வெளியிடும். பல்கலைக் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில், தேர்வுகளை
நடத்தி, முடிவுகளை வெளியிடும் பணியை, பல்கலைக் கழகங்கள் செய்கின்றன.
தன்னாட்சி கல்லூரிகளில், இந்தாண்டிற்கான இளங்கலை தேர்வு முடிவுகள்
வெளியாகி விட்டன. பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், இளங்கலை
தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, தற்போது தான் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதுகலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, பல
கல்லூரிகள் துவங்கி விட்டன. ஆனால், முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்பான
அரசாணையில், "இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதுகலை பட்டப்
படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு மாறாக, முதுகலை பட்டப் படிப்புக்கான மாணவர்
சேர்க்கையைத் துவங்கியுள்ளது, முறைகேடுக்கு வழிவகுக்கும் என, குற்றம்
சாட்டப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க
தலைவர் தமிழ்மணி கூறியதாவது:
சென்னை, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்
கழகங்களில், முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டனர்.
சென்னையில் உள்ள பல அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும்,
முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
மாணவர்களின் முதல், ஐந்து பருவத் தேர்வு மதிப்பெண்ணை கொண்டு, கல்லூரி
நிர்வாகம், முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தி, கல்வி கட்டணத்தையும்
வசூலிக்கின்றன. ஒருவேளை, மாணவர், ஆறாவது பருவத் தேர்வில் தோல்வியடைந்தால்,
மாணவர் சேர்க்கை கதி என்ன என்பது பற்றி, தெளிவான தகவல் இல்லை.
பல்கலைக்கழகங்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது
வருத்தத்திற்குரியது. இதனால், நல்ல மதிப்பெண் பெறும் மாணவருக்கு, இடம்
கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு தமிழ்மணி கூறினார்.
இதுகுறித்து, முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம்
கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும், ஒரே நேரத்தில்,
தேர்வுகள் நடத்தி, முடிவுகள் வெளியிட வேண்டும். அப்போது தான், அனைத்து
தரப்பு மாணவருக்கும், கல்வி கற்க, சம வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு
சென்று மேல்படிப்பை தொடரும் மாணவருக்கும், சிக்கலின்றி வாய்ப்பு
கிடைக்கும். இவ்வாறு, திருவாசகம் கூறினார்.
No comments:
Post a Comment