"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள், கல்லூரிகளில் எந்த
கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற அரசாணையை அமல்படுத்துவதில்,
ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை பின்பற்றுகிறது.
கடந்த ஆண்டு, ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடியின மாணவர் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி,
"அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் படிக்கும், ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடியின மாணவர், அனைத்து கட்டாய கல்வி கட்டணங்களையும் செலுத்த
தேவையில்லை" என அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, டியூஷன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள்
போன்றவற்றிற்கான கட்டணத்தை, கட்ட தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம்
கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பல சுயநிதி கல்லூரிகளில், அத்திட்டம் அமலில் இல்லை. பெரும்பாலான
கல்லூரி நிர்வாகங்கள், கட்டாய கட்டணம் கட்ட, மாணவர்களை வற்புறுத்தி வந்தன.
தனியார் கல்லூரிகளிடம், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, உயர்கல்வித்
துறையுடன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கைகோர்த்துள்ளது.
இதுகுறித்து, ஆதி திராவிடர் நலத்துறை, உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது: முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து, தனியார் மற்றும்
அரசு, சிறுபான்மை கல்லூரிகளுக்கு, அரசாணை குறித்த கடிதம், மீண்டும்
அனுப்பப்படும்.
இதுதவிர, அரசாணையை அமல்படுத்துவது குறித்து, உயர் கல்வி துறையின் உயர்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலை கழகத்தில் நடந்து வரும்
பொறியியல் கல்லூரி கலந்தாய்வில், இரண்டு தாசில்தார் அடங்கிய, குழுவை
அமைத்துள்ளோம்.
அவர்கள், மாணவர் கொண்டு வரும், சான்றிதழை சரிபார்த்து, முத்திரை இடுவர்.
அந்த முத்திரை உள்ள தாளை காட்டி, கல்லூரிகளில், கட்டணமின்றி சேரலாம். அதே
போல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், திட்டத்தை முறைபடுத்துவது
தொடர்பாக, கல்லூரி கல்வி நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment