பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின்
பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை சேர்க்காததால், அரசின்
சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத் தேர்வுகளில், 16 ஆயிரம் பேர், மறு மதிப்பீட்டிற்கு
விண்ணப்பித்திருந்தனர். அதில், 1,400 பேருக்கு, 10 மதிப்பெண்கள் வரை,
கூடுதலாக கிடைத்தது. 1,000 பேருக்கு, மதிப்பெண்கள் குறைந்திருந்தது.
மறு மதிப்பீட்டில், மதிப்பெண் மாறிய மாணவர்களுக்கு, திருத்திய மதிப்பெண்
பட்டியலை, கடந்த மாதம், 15 ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை வழங்கியது.
ஆனால், மாநில தகுதிப் பட்டியலை திருத்தாததால், பல மாணவர்கள், அரசின்
சலுகைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில், 1,175 மதிப்பெண்கள் பெற்றிருந்த, கடலூர் மாணவர்,
அர்ஜுன் தன்ராஜ், மறுகூட்டலில், 1,180 மதிப்பெண்கள் பெற்றார். இவர், மாவட்ட
அளவில், முதலிடத்தையும், மாநில அளவில், 10ம் இடத்தையும் பிடித்தார். 1,174
மதிப்பெண்கள் பெற்றிருந்த, கடலூர் மாணவி தீபிகா, மறு மதிப்பீட்டில், 1,177
மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் மூன்றாம் இடத்திற்குத் தகுதி பெற்றார்.
இவர்களின் கூடுதல் மதிப்பெண்களை ஏற்று, மாநில மற்றும் மாவட்ட தகுதி
பட்டியலை திருத்தம் செய்யாததால், தனியார் அமைப்புகள் வழங்கிய பரிசுகளை, பெற
முடியவில்லை.
மாணவர் அர்ஜுன் தன்ராஜ், பிற்பட்டோர் பிரிவில், மாவட்டத்தில் முதலிடம்
பிடித்திருந்தார். அவரது மதிப்பெண் பட்டியலில், 1,180 மதிப்பெண் என,
இருந்தது. ஆனால், பிற்பட்டோர் நலத்துறை அலுவலருக்கு, மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் சமர்ப்பித்த பட்டியலில், அர்ஜுன் தன்ராஜ், 1,175
மதிப்பெண்கள் என, குறிப்பிட்டிருந்தது. தங்கள் பிள்ளைகள் பெற்ற
அங்கீகாரத்தை நிலைநாட்ட, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம், பெற்றோர்,
போராடி வருகின்றனர்.
No comments:
Post a Comment