தமிழகத்தில், 50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்படாதது குறித்து, போக்குவரத்து துறை கவலை தெரிவித்துள்ளது.
விபத்துகளை தடுக்க, இக்குழுக்கள் அமைப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், 6,304
தொடக்கப்பள்ளி; 944 நடுநிலைப் பள்ளி; 1,868 உயர்நிலைப் பள்ளி; 2,247
மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம், 11,365 தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.
இந்த பள்ளிகளின் வாகனங்களில், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா,
போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என, போக்குவரத்து துறை
தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பள்ளிகளில், தலைமை ஆசிரியர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர், கல்வித் துறை
அதிகாரி, மோட்டர் வாகன ஆய்வாளர், பெற்றோர் - ஆசிரியர் சங்க பிரதிநிதி
ஆகியோர் இடம் பெற்ற, போக்குவரத்து குழுவை அமைக்க வேண்டும்.
இந்த குழுக்கள், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை, ஓட்டுனரின் நிலை
உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி, ஆலோசனை கூட்டம் நடத்தி, நடவடிக்கை
எடுக்க வேண்டும். இதில், 50 சதவீத பள்ளிகள், போக்குவரத்து குழுக்களை
அமைக்கவில்லை என, கண்டறியப்பட்டு உள்ளது.
"இப்பள்ளிகளின் வாகனங்களை இயக்க அனுமதிக்க மாட்டோம்" என போக்குவரத்து
துறை எச்சரித்தும், பெரும்பாலான பள்ளிகள் குழுக்களை அமைக்காமல் அலட்சியமாக
உள்ளன. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகனங்களை முறையாக இயக்க, பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவை அமைக்க
வேண்டியது அவசியம். இதன் மூலம், விபத்துகளை தடுக்க முடியும். இருப்பினும்,
50 சதவீதம் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கவில்லை. இந்த பள்ளிகளின் மீது,
துறையின் இயக்குனரகம் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி
எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து குழுக்களை அமைப்பதால் ஏற்படும் நன்மை குறித்து, பள்ளிகளின்
நிர்வாகத்தினரிடம், ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுக்கள் விளக்கி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment