நெல்லை மாவட்டத்தில் போலி செவிலியர்,
பிசியோதெரபி பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் கல்வி
நிறுவனங்களில் செவிலியர், பிசியோதெரபி, ஆய்வக நுட்பனர் ஆகியவற்றிற்கான
பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இக்கல்விகளை கற்க மத்திய,
மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய
வேண்டும். டில்லியில் செயல்பட்டு வரும் இந்திய நர்சிங் கவுன்சிலில்
பெறப்பட்ட சான்றிதழ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்துடன்
இணைக்கப்பட்ட கல்வி நிலையங்கள், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அங்கீகாரம்
பெற்ற கல்வி நிலையங்களில் படித்து பெறப்படும் சான்றுகளே வேலைவாய்ப்பிற்கு
ஏற்று கொள்ள கூடியவை ஆகும்.
இந்த அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் சில தனியார்
ஆஸ்பத்திரிகள், டிரஸ்ட்கள் பெயரில் போலி கல்வி நிலையங்கள் செயல்படுவதாக
புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசால் அங்கீகரிக்கப்படாத போதுமான
உட்கட்டமைப்பு வசதியற்ற நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குவதில் உறுதி அளிக்க இயலாது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து செவிலியர் பயிற்சி கல்லூரிகள்,
பாரா மெடிக்கல் கல்வி நிலையங்கள் ஆகியவை நலப் பணிகள் இணை இயக்குனரால் ஆய்வு
செய்யப்படும். அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment