திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதி மங்கலங்கிழார்
பயிற்சி மையத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு,
இலவச பயிற்சி அளிப்பதால், பயிற்சி பெற வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை,
நாளுக்கு அதிகரித்து வருகிறது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் நடுநிலைப்
பள்ளியில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாரத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், உள்ளூர் மற்றும் வெளியூர்
ஆசிரியர்கள் தாமாக முன் வந்து, இலவசமாக இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.
துவக்கத்தில் 400 பேர் மட்டுமே பயிற்சி பெற்றனர். தற்போது
1,000 பேர் வருகின்றனர். வாரம்தோறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஒலிபெருக்கி வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இருக்கை வசதி இல்லாததால் குறிப்பெடுக்க
சிரமப்படுகின்றனர்.
தேர்வுக் கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் செலுத்த
சிரமப்படும் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவ வேண்டும், அனைவரும் ஆசிரியர் தகுதி
தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கு
சமூக அறிவியல், கணிதம் என, தனித்தனியாக பயிற்சி உண்டு. அந்தந்த பாடங்களில்
அனுபவம் உள்ள ஆசிரியர்கள், இலவசமாக பயிற்சி அளிக்கின்றனர்.
இலவச பயிற்சி என்பதால், பள்ளிப்பட்டு, மத்தூர்,
பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், திருத்தணி, சோளிங்கர்,
அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
இவர்களில், பெண்கள், 70 சதவீதம் பேர் உள்ளனர். நிறைமாத
கர்ப்பிணிகளும் பயிற்சிக்கு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக இங்கிருந்து
ஒவ்வொரு ஊருக்கும் நேரடியாக ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக,
இப்பகுதியில் "திடீர்" ஆட்டோ நிறுத்துமிடம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment