எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், பொறியியல்
கல்லூரிகளில் சேர, குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து, தெளிவான
நிலை இல்லாததால், அவர்களின் நிலை, கேள்விக்குறியாக உள்ளது. இந்த
விவகாரத்தில், தமிழக அரசிடம் இருந்து, தெளிவான உத்தரவு வராததால், அண்ணா
பல்கலையும் குழப்பம் அடைந்துள்ளது.
பொறியியல் படிப்புகள், கிராமப்புற, ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கும் கிடைக்க வேண்டும்; குறிப்பாக, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், அதிகளவில், பொறியியல் கல்வி பயில வேண்டும் என்பதற்காக, பொறியியல் கல்லூரிகளில், இந்த பிரிவு மாணவ, மாணவியர் சேர்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 35 என, நிர்ணயித்து, சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அதிகளவில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டில், எஸ்.சி., பிரிவில், 14 ஆயிரத்து, 594 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இந்நிலையில், இதர வகுப்பு பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை, 45 சதவீதமாகவும், இட ஒதுக்கீட்டின் கீழ் வருபவர்களுக்கு, 40 சதவீத மதிப்பெண்களையும் நிர்ணயித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை, ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சமீபத்தில், ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்பின், தமிழக அரசு சமர்ப்பித்த, "அப்பீல்” மனுவையும், "முதல் பெஞ்ச்” தள்ளுபடி செய்தது. "ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த குறைந்தபட்ச மதிப்பெண்களுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ, மாநில அரசு நிர்ணயிக்கலாம். ஆனால், அதைவிட குறைவாக நிர்ணயிக்க, சட்டப்பூர்வமாக, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என, ஐகோர்ட் தெரிவித்துவிட்டது.
மே, 4ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், 59 மையங்களில், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மையங்களுக்கும், விண்ணப்பங்கள் அனுப்பும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே, 9ம் தேதி வெளியாகின்றன.
கடந்த ஆண்டு வரை, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர, குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 35 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண்கள், 40 சதவீதம் எனில், முக்கியப் பாடங்களில், குறைந்தபட்சம், தலா 80 மதிப்பெண்கள் வீதம், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை பணி, விரைவில் துவங்கிவிடும் என்பதால், தெளிவான முடிவை, அண்ணா பல்கலை அறிவிக்க வேண்டும் என, இந்த சமுதாய மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், "தமிழக அரசிடம் இருந்து, இதுவரை, எவ்வித உத்தரவோ, தெளிவான விதிமுறைகளோ வராததால், தற்போதைய நிலையில், நாங்கள் எவ்வித முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்” என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலை வட்டாரங்கள் மேலும் கூறுகையில்,"கலந்தாய்வு துவங்குவதற்குள், அரசின் முடிவு கிடைத்துவிடும். எனினும், ஒவ்வொரு ஆண்டும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அனைத்தும் நிரம்புவதில்லை. 35 சதவீதம் என்ற நிலை இருந்தபோதே, பல ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டு, 3,000க்கும் மேற்பட்ட இடங்கள், இந்த பிரிவில் நிரம்பவில்லை. எனவே, 40 சதவீதம் நிர்ணயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்தாலும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்பு வராது” என, தெரிவித்தன.
இதுகுறித்து, இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன் கூறியதாவது:
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கும், உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற நிலையை ஏற்படுத்தியதுடன், கல்வி கட்டணத்தையும், தமிழக அரசே வழங்குகிறது. இதுபோன்ற நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண்களை, 40 சதவீதமாக நிர்ணயித்தால், கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். எனவே, ஏற்கனவே இருந்த நிலையை, தமிழக அரசு உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment