திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2
தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்"
குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது:
ஒவ்வொரு மாணவரும் பிளஸ் 2 முடித்து, சரியான உயர் கல்வி படிப்புக்களை
தேர்வு செய்வதன் மூலமே அவர்களின் எதிர்காலம் அமையும். தற்போதைய நிலையில்
பட்டங்கள் சார்ந்து இல்லாமல் எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள்
சார்ந்த படிப்புக்களை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். மருத்துவம்,
பொறியியல் படிப்புக்களை தவிர, அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும்
ஏராளமான துறைகள் உள்ளன.
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அமோகமாக உள்ளன. அவற்றை தேடிகண்டறிய
வேண்டும். மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள் இந்திய மருத்துவ
படிப்புக்களான சித்தா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புக்களை தேர்வு
செய்யலாம்.
பல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம்,
மீன்வளம் போன்ற படிப்புகளும் பயன்தரக்கூடியவை. நர்சிங் முடிக்கும்
மாணவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புக்கள் உள்ளன. இதுதவிர வேளாண்மை, ஓவியம்,
இசை, பிலிம் இன்ஸ்டிடியூட் கேட்டரிங் டெக்னாலஜி, ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆடை
வடிவமைப்பு, அனிமேஷன் போன்ற பலதுறைகளும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை
எட்டக்கூடியவை.
கலை மற்றும் அறிவியியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்.,
சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களையும் மாணவர்கள்
தேர்வு செய்யலாம். இந்தியாவில் விளம்பரதுறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.32
ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
விளம்பர துறை சார்ந்த பி.எஸ்.சி., விஷூவல் கம்யூனிகேஷன், பிலிம் அன்ட்
டெலிவிஷன் தயாரிப்பு, மக்கள் தொடர்பு துறை போன்ற படிப்புக்களையும்
மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வு செய்யலாம். மாணவர்கள் படிப்புடன் கூடுதல்
தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று, மாணவர்களை பெற்றோர்கள்
வற்புறுத்தக் கூடாது. விரும்பி படிக்கும் படிப்பில்தான் மாணவர்கள்
சாதிப்பார்கள், என்றார்.
No comments:
Post a Comment