பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை
திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட
உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு
நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு
அமல்படுத்தி வருகிறது.
மதிப்பெண்கள், மாணவர்களிடையே,
வேறுபாடுகளை ஏற்படுத்தி, மன அளவில், பாதிப்படைய செய்வதால், "கிரேடு&'
முறையை, சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி அளவிலான பொதுத்தேர்வு,
சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத்தேர்வு என, இரு வகையான தேர்வுகளையும்
நடத்துகிறது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நடைமுறையில் உள்ள தொடர் தேர்வு கண்காணிப்பு
முறையை, தமிழக அரசும், எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தி, உள்ளது. இதைத்
தொடர்ந்து, கிரேடு முறையும், மாநில பாடத்திட்டத்தில், விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்வு சீர்திருத்தங்களின் அடுத்த அம்சமாக, புத்தகத்தைப்
பார்த்து, தேர்வெழுதும் திட்டத்தை, வரும் கல்வி ஆண்டில் இருந்து,
அமல்படுத்த, சி.பி.எஸ்.இ., போர்டு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டம் குறித்து, கல்வியாளர் சதீஷ் கூறியதாவது: இந்த
திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு வரவில்லை. எனினும்,
விரைவில் அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின்படி,
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தேர்வுக்கான பாடப் பகுதிகள்
குறித்து, முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
அந்த பாடப் பகுதிகளில் இருந்து, கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள்,
பாடப் புத்தகங்களைப் பார்த்து, விடைகளை எழுதலாம். மேலோட்டமாக பார்த்தால்,
இது எளிதான காரியம் போல் தெரியும். ஆனால், இது மிகவும் கடினம் தான்.
குறிப்பிட்ட பாடப் பகுதிகளை, முழுமையாகவும், ஆழமாகவும், புரிந்துகொண்டு
படித்தால் மட்டுமே, குறிப்பிட்ட கேள்விகளுக்கு, மாணவர்களால் பதில் எழுத
முடியும். நேரடியாக கேள்விகள் வராது.
நுணுக்கமான முறையில், மாணவர்கள் சிந்தித்து விடை எழுதும் வகையில் தான்,
கேள்விகள் அமையும். எனவே, கேள்வியின் தன்மையை முதலில் புரிந்துகொண்டு,
உடனடியாக அதற்கான விடைகள், எந்த பாடப் பகுதியில் வருகிறது என்பதை, உடனடியாக
கண்டுபிடித்தால் தான், விடையை எழுத முடியும். சரியாக படிக்காமல்
இருந்தாலோ, புரிந்து படிக்காமல் இருந்தாலோ, உடனடியாக விடையை யூகிக்க
முடியாது. விடையை தேடுவதிலேயே, நேரம் கரைந்துவிடும்.
எனவே, அனைத்து பாடப் பகுதிகளையும், கண்டிப்பாக மாணவர்கள் படிக்க வேண்டும்.
* இந்த திட்டத்தால், மாணவர்களின் மன அழுத்தம் குறையும்.
* மனப்பாடம் செய்யும் முறை ஒழியும்.
* தேர்வு முறைகேடுகள் இருக்காது. இவ்வாறு சதீஷ் கூறினார்.
இந்த புதிய திட்டம், முதலில் 10ம் வகுப்பிற்கு, வரும் கல்வியாண்டிலும்,
அதைத் தொடர்ந்து, 2014-15ல், பிளஸ் 2 வகுப்பிற்கும் அறிமுகப்படுத்தப்படும்
என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment