"விலையில்லா மடிக்கணினி மூலம் உலக விஞ்ஞான அறிவை ஏழை மாணவர்களும்
பெற்று, கல்வித்தரத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்பதே முதல்வரின்
குறிக்கோள்" என அமைச்சர் சம்பத் பேசினார்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், மூன்றாமாண்டு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார்
தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் சம்பத், 828 மாணவர்களுக்கு மடிக்கணினி
வழங்கி பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, வழங்கப்படும் மடிக்கணினியை
மாணவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து, பயன்பெற வேண்டும். உயர் கல்வித்துறைக்கு
கடந்த நிதியாண்டை விட 18 சதவீதம் கூடுதலாக 3 ஆயிரத்து 226 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக, 32 கலைக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 14 ஐ.டி.ஐ.,
உட்பட 52 கல்லூரிகள் துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தாலிக்குத்
தங்கம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கு
43 ஆயிரத்து 449 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொய்ப்பு, காவிரி நீரின்றி பாதித்த விவசாயிகளின் நலன் கருதி 31
மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, 17 லட்சத்து 94
ஆயிரத்து 842 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாய் வீதம் 853 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் சாதனை செய்துள்ளார்.
லேப்டாப் மூலம் உலக விஞ்ஞான அறிவை ஏழை மாணவர்களும் பெற்று
கல்வித்தரத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோள்.
அதற்கேற்ப, மடிக்கணினி மூலம் மாணவர்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல
வேண்டும். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.
No comments:
Post a Comment