வெளிநாட்டு பல்கலைகளில் உள்ள படிப்புகள், அங்கு கிடைக்கும் உதவித்தொகை,
வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை, மாணவர்கள் அறியும் வகையில், பன்னாட்டு
தொடர்பு மையத்தை, தமிழக அரசு அமைக்க உள்ளது.
தமிழகத்தில், 63 அரசு
கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 446 சுயநிதி கல்லூரிகள்
உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இவற்றில் படிக்கின்றனர். படிக்கும்
காலத்தில், வேலை வாய்ப்புகள் பெற, சிறப்பு பயிற்சி வகுப்புகளை, அரசு
நடத்துகிறது.
கல்லூரிகளில், வேலை வாய்ப்புகளை பெற மாணவர்களுக்கு, பல்வேறு வழிகளை அரசு
அமைத்தாலும், மேற்படிப்பு வாய்ப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்
உள்ள வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு, மாணவர்களிடம் இல்லை.
இளங்கலை படிப்பை முடிக்கும், 75 சதவீத மாணவர்கள், மேற்படிப்பை தொடராத
நிலையே, நிலவுகிறது. மேற்படிப்பு தகவல்களை, மாணவர்கள் பெறாத நிலையில்,
வெளிநாட்டு பல்கலைக்கழக தகவல்களை, பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதை
களையும் வகையில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள மேற்படிப்பு
வாயப்புகள், உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை, இலவசமாக அரசு
வழங்க உள்ளது.
இதற்காக, மாநில உயர் கல்வி மன்றத்தில், பன்னாட்டு தொடர்பு மையம்
அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்த மையம் இணைப்பை ஏற்படுத்தும்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர், சிந்தியா
பாண்டியன் கூறியதாவது: அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள்,
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களை,
மாணவர்களுக்கு அளிக்க உள்ளோம்.
அரசு கல்லூரிகளில் படிக்கும், மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த மையம்
அமைக்கப்பட உள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகம், ஆசிரியர்கள்,
மாணவர்களிடையே, இந்த மையம் பாலமாக இருக்கும். இவ்வாறு, சிந்தியா பாண்டியன்
கூறினார்.
No comments:
Post a Comment