குழந்தைகளை நல்வழிப்படுத்த, நீதிக் கதைகள் கூறும் தன்னார்வ கதை சொல்லி
அமைப்புகளை கிராம நூலகங்களில், ஏற்படுத்த, தமிழக பொது நூலகத்துறை, முயற்சி
எடுத்துள்ளது.
குடும்பங்களில், குழந்தைகளுக்கு,
கதை சொல்லி உணவு ஊட்டுவது, தூங்க வைப்பது வழக்கமாக இருந்தது. அதன் மூலம்
நீதி, நல்லொழுக்கம், வரலாறு, பண்பு குறித்து, சிறுவயதிலேயே குழந்தைகள்
அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு, கேட்புத்
திறனும் வளர்ந்தது.
கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி விட்டது. அவசர
உலகில் குழந்தைகளுக்கு கதை சொல்ல, பெரும்பாலான குடும்பங்களில் தகுந்த ஆள்
இல்லை. இந்நிலையை மாற்ற, பொது நூலகத்துறை முடிவு செய்துள்ளது. கிராமப்புற
நூலகங்களில், வாசகர்கள் மூலம், கதை சொல்லும் பழக்க முள்ளவர்களைத் தேர்வு
செய்து, குழந்தைகளுக்கு கதை சொல்லும் அமைப்புகளை உருவாக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
"கதை சொல்லிகள்" தன்னார்வத்துடன் பணியாற்ற, நூலகர்கள் உதவி செய்வர்.
விடுமுறை நாட்களில், கிராம நூலகங்களுக்கு, குழந்தைகளை வரவழைத்து, கதை சொல்ல
வழிவகை செய்யபப்டும். சென்னையில் நடந்த, மாவட்ட நூலக அலுவலர்களுக்கான
ஆய்வுக் கூட்டத்தில், இது குறித்து, மாவட்ட நூலகர்களுக்கு,
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment