பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
"விவசாய படிப்புகளில் எதிர்காலம்" குறித்து கோவை வேளாண் பல்கலை டீன்
ராஜாராமன் பேசியதாவது: உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் பேர், இந்தியாவில்
உள்ளனர். இங்கு 9 சதவீதம் மட்டுமே, விளைநிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள்
குறைந்து, உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
வரும் 2050 ஆண்டில், நமது உணவு உற்பத்தியை, இருமடங்கு அதிகரிக்க
வேண்டும். விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்துச்செல்ல,
துடிப்பான இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.
வருங்காலங்களில் வேளாண்துறை சார்ந்த படிப்புகளுக்கு, எதிர்காலம் உள்ளது.
ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற பலர், விவசாய படிப்புக்களை
தேர்வு செய்தவர்களே. கோவை, மதுரை வேளாண் பல்கலையில் ஏராளமான படிப்புகள்
உள்ளன. நான்கு ஆண்டுகள் படிப்பான, பி.டெக்., பயோ டெக்., அக்ரிக்கல்சர்
மேனேஜ்மென்ட், அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, தோட்டக்கலை, உணவு
பதப்படுத்தும் தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் உள்ளன.
பி.எஸ்சி., படிப்புகளும் உண்டு. ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றிபெற,
பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்யலாம். ஆற்றல் மற்றும் சோலார்
ஆற்றல் துறையில், எதிர்கால வளர்ச்சி அபாரமாக இருக்கும். இப்படிப்புகள்,
உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின்
வேளாண் துறை, வங்கிகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம்.
தொழில்முனைவோராகவும் சாதிக்க முடியும், என்றார்.
"கால்நடை மருத்துவ படிப்புகளில் எதிர்காலம்" குறித்து,
திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்
முருகானந்தம் பேசியதாவது: கால்நடை மருத்துவ படிப்புகள், மருத்துவ
படிப்புக்கு இணையானது. எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு இணையான சம்பளம்
உண்டு. ஐந்து ஆண்டு படிப்பு இது.
விண்ணப்பிக்க, பிளஸ் 2 வில், 60 சதவீத மதிப்பெண் வேண்டும். படித்து
முடித்தவுடன் வேலைகிடைக்கும்; கடந்த 2011 வரை, இப்படிப்பை
முடித்தவர்களுக்கு, அரசு வேலை கிடைத்துவிட்டது. தனியார் மையங்களில் வேலைகள்
காத்திருக்கின்றன.
ஆண்டுதோறும், 260 கால்நடை மருத்துவர்கள் படித்து வெளியேறுகின்றனர்.
இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும்.
திருப்பரங்குன்றம் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் உட்பட நான்கு
மையங்களிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும்.
மேலும், சொந்தமாகவும் கால்நடை கிளினிக் வைக்கலாம். முதுகலை படிப்பு
முடித்தால், பல்கலையில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். சிவில் சர்வீஸ்
தேர்வு எழுத விரும்புவோர், இப்படிப்பை தேர்வு செய்யலாம். வெளிநாட்டு
கால்நடை பல்கலையிலும், வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுதவிர மாநில அரசின்
ஆவின் மற்றும் வங்கி துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, என்றார்.
அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete