நீலகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்
எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம்
விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில
வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 50 அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகள் உள்ளன. ஆரம்ப, நடுநிலை கல்வி போதிக்கும் ஊராட்சி ஒன்றியப்
பள்ளிகள், கிராமங்கள் தோறும் உள்ளன. பெற்றோர், மாணவர்கள் மத்தியில்
அதிகரித்து வரும் ஆங்கில மோகம், மேலை நாட்டு கலாச்சாரம் பழக்க, வழக்கம்
போன்றவற்றால், தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்க பெற்றோர்
ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை
குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த,
செயல் வழிக்கற்றல் உட்பட கல்வி போதனை முறையில் பலவித மாற்றங்களை மத்திய,
மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன. தொடர்ச்சியாக, கடந்த கல்வியாண்டு முதல்,
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பில், ஆங்கில மீடியத்தை
அறிமுகப்படுத்த அரசு அனுமதியளித்தது.
இதன்படி, நீலகிரியில், கடந்த கல்வியாண்டில் (2012-13),
பந்தலூர், நெடு குளா, ஸ்ரீமதுரை, அதிகரட்டி, எருமாடு ஆகிய 5 அரசு
பள்ளிகளில், 6ம் வகுப்பில், ஆங்கில மீடியம் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பு
கல்வியாண்டில், (2013-2014) அம்பமூலா, பிதர்காடு, சோலூர், கக்குச்சி,
எமரால்டு அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி
கொண்டுவரப்படவுள்ளது.
தொடர்ச்சியாக, மாநிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப்
பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி போதிக்கும்
திட்டத்தை கொண்டு வர அரசு தயாராகியுள்ளது. இதற்கு, "குறைந்தது 100
மாணவர்கள் ஒரு பள்ளியில் படிக்க வேண்டும்" என அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 345 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் உள்ளன. ஊட்டி,
குன்னூர், கோத்தகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர்
எண்ணிக்கை குறைவு; ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் குறைவான மாணவர்களே
உள்ளனர். மாறாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியப்
பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகம்.
மாவட்டத்தில் உள்ள 88 ஊராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு முதல்,
ஆங்கில மீடியத்தை கொண்டு வரும் திட்ட வரைவை, மாவட்ட தொடக்க கல்வி துறை,
அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், அடுத்த மாத இறுதிக்குள்,
அரசின் முடிவு தெரிந்துவிடும், எனக் கூறப்படுகிறது. "அரசு
அனுமதியளித்தால், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
அறிமுகப்படுத்தப்படும்" என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment