"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, ஒவ்வொரு
மாவட்டத்திலும், மூன்று வேலைவாய்ப்பு முகாம்கள், 2013-14ம் ஆண்டில்
நடத்தப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
துறை மூலம், 2013-14ம் ஆண்டில், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து,
சட்டசபையில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டில், மாவட்டத்துக்கு, மூன்று என, 100 வேலைவாய்ப்பு முகாம்கள்,
தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் நடத்தப்படும். இதற்கு, 25 லட்சம் ரூபாய்
ஒதுக்கப்படும். இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த, பயிற்சிகள்
அளிக்கப்படும். இதற்கு, 2.47 கோடி ரூபாயும், 100 நுண் தொழில்களை உருவாக்க,
2.50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, கன்னியாகுமரி
மாவட்டங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில், பவளப் பாறைகள் அமைக்கப்படும்.
மேலும், இம்மாவட்டங்களில், 3 கோடி ரூபாய் செலவில், ஆறு மீன் இறங்கு தளங்கள்
கட்டப்படும்.
புது வாழ்வுத் திட்ட செயல்பாடுகளை, 15 மாவட்டங்களில் உள்ள, 70 ஊராட்சி
ஒன்றியங்களில் வலுப்படுத்த, வட்டார முகமைகள் தோற்றுவிக்கப்படும். இதற்காக,
3.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்தி, கழிவுகளை உயிரிச் செரிமானம் செய்யும், 14 பசுமை சுகாதார
வளாகங்கள் 63 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இளைஞர்கள் போதை, புகைப் பிடித்தல் மற்றும் பாலின கேடுகளுக்கு
அடிமையாவதைத் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக, கிராம
வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம், 4,170 இளைஞர் வழிகாட்டிகள்
நியமிக்கப்படுவர். இதன்மூலம், 1.50 லட்சம் கிராம இளைஞர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு, 2.25 கோடி ரூபாய் செலவிடப்படும்.
No comments:
Post a Comment