விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள்
விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், "பாதிக்கப்பட்ட,
221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது" என, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த, 1ம் தேதி, 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் மாவட்டம்,
செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு பள்ளியில் தேர்வெழுதிய, 221
மாணவர்களின் விடைத்தாள்கள், சத்தியமங்கலம் தபால் அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டன. இதை, பஸ்சில் எடுத்துச் சென்ற தபால் ஊழியர், விடைத்தாள்
பார்சலை தொலைத்து விட்டார்.
இந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருத்தாசலத்தில், தமிழ் இரண்டாம் தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில்
விழுந்ததில், 61 விடைத் தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த
சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது என்றும்,
தமிழ் முதற்தாளில் என்ன மதிப்பெண் பெறுகின்றனரோ, அதே மதிப்பெண், இரண்டாம்
தாளுக்கு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதனை பின்பற்றி, செஞ்சி மாணவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாள்
மதிப்பெண்கள், முதல் தாளுக்கு வழங்கப்படும் என, கூறப்பட்டது. விருத்தாசலம்
முறையை, செஞ்சி மாணவர்களுக்கும் பின்பற்றலாம் என, தமிழக அரசுக்கு,
தேர்வுத்துறை, பரிந்துரை அனுப்பியிருந்தது.
தேர்வுத் துறையின் இந்த முடிவு குறித்து, கடந்த 4ம் தேதி, தினமலர்
நாளிதழில், செய்தி வெளியானது. எனினும், கடந்த, 5ம் தேதி, இந்த விவகாரம்
தொடர்பாக, சட்டசபையில் கல்வி அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், "செஞ்சி
மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது"
என, தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மாணவர்கள்
மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுதேர்வு முடிவை அரசு எடுத்தால், அது, முரண்பாடான முடிவாக அமையும் என,
6ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், செஞ்சி
மாணவர்களுக்கு, மறுதேர்வு கிடையாது என்றும், அவர்கள், ஆங்கிலம் இரண்டாம்
தாளில் பெறும் மதிப்பெண்கள், முதல் தாளுக்கு வழங்கப்படும் என்றும்,
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இயக்குனர் அறிக்கை:செஞ்சி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு
மறு தேர்வு நடத்தினால், அது, மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை
ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, 221 மாணவர்களுக்கும், அவர்களது
ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களே, முதல் தாளுக்கும்
வழங்கப்படும்.
ஆங்கிலம் இரண்டாம் தாளில் தோல்வி அடைந்திருந்தால், அவர்களுக்கு, ஆங்கில
பாடத்தில், குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தை அளித்து, ஆங்கிலப் பாடத்தில்
தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment