பிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கொண்ட வினா ஒன்றுக்கு, அனைத்து
மாணவர்களுக்கும், மதிப்பெண் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள
அறிவிப்பால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
குழப்பமடைந்துள்ளனர்.
வழக்கு : கணித தேர்வில், கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றத்தில், தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும்பணி, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. கணித விடைத்தாள்கள் திருத்தும்பணி, ஓரிரு நாளில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, 5ம் தேதி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், ஆறு மதிப்பெண் கொண்ட, 41வது கேள்விக்கு, பதில் சரியாக இருந்தாலும், இல்லையென்றாலும் மதிப்பெண் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 80 சதவீத விடைத்தாள்கள் திருத்தி முடித்து, மதிப்பெண் வழங்கிய நிலையில், "41வது கேள்விக்கு, மதிப்பெண் வழங்குங்கள்' என்ற கடிதம், ஆசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதியவிடை : விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, ஆசிரியர்களுக்கான விடைக் குறிப்பில், "அணிகள் பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ள, 41வது கேள்விக்கான விடை தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அதை திருத்திக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டு, வெள்ளிக்கிழமை மதியம், புதிய விடை ஒன்றை, தேர்வுத் துறை வழங்கி உள்ளது.
"அந்த வினாவுக்கான விடையை, 5 என்றோ அல்லது மைனஸ் 5 என்றோ யார் எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது. 80 சதவீதத்துக்கும் மேல் விடைத்தாள்களை திருத்தி, முடித்த நிலையில், இப்போது, மதிப்பெண்களை மாற்றுவது என்பது கடினம்.
அந்த மதிப்பெண் இனி அவ்வளவு தான். இனிமேல், திருத்தும் விடைத் தாள்களுக்கு, வேண்டுமானால் மதிப்பெண் போடலாம். தேர்வுத் துறை என்ன முடிவு எடுக்கப் போகிறது என, தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நடந்தது என்ன? : அரசு மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் தங்கமாரி, கையெப்பமிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், இ- மெயில் அனுப்பப்பட்டது. அதில், "பிளஸ் 2 கணித பாடத்தில், 41வது கேள்விக்கு, ஆங்கில வழியில் கொடுத்தது போன்று, தமிழ் வழியிலும், மைனஸ் 5 என்ற எண்ணிற்குப் பதிலாக, 5 என, எடுத்து தீர்வு கண்டிருந்தாலும், மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை, திருத்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வுத்துறை உயர் அதிகாரிகள், எந்த திருத்தமும் செய்யுமாறு நாங்கள் கூறவில்லை என, மறுத்துள்ளது.
No comments:
Post a Comment