ஜார்க்கண்டில், ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள, மூன்று அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க,
தினமும் சிவப்பு சீருடை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், அன்கரா பிரகன்ட் மற்றும் சீதாகர்
கிராமங்களில் உள்ள, மூன்று அரசு பள்ளிகள், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி
அமைந்துள்ளன. இந்த ரயில் தடம் வழியாக, தினமும் 45 ரயில்கள் செல்வதால்,
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வரை, அடிக்கடி ரயில்கள் மோதி மாணவர்கள் இறக்கும்
சம்பவம் நிகழ்ந்தது. இதனால், இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப தயக்கம் காட்டினர்.
பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும்,
அப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள், தங்களின் படிப்பை தொடரவும் விரும்பிய,
மூன்று அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளி
மாணவர்களுக்கு, சிவப்பு நிற சீருடையை அறிவித்து, அதை அவர்களுக்கு தங்கள்
சொந்த செலவில், இலவசமாக வாங்கி கொடுத்தனர்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர் தனுராம் லோக்ரா கூறியதாவது:
எங்கள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எல்லாம், ரயில்வே தண்டவாளத்தை கடந்தே வர
வேண்டியுள்ளது. அப்படி வரும் போது, அவர்கள் விபத்துகளில் சிக்கி
உயிரிழப்பதை தடுக்க, சிவப்பு சீருடை அறிவித்தோம். சிவப்பு நிற சீருடை
அணிவதால், அவர்கள் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது
தவிர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சிவப்பு நிற உடையை கண்டதுமே, தொலை தூரத்தில்
வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒலி எழுப்பி, அவர்களை எச்சரிக்கை செய்கின்றன.
அத்துடன், பல ரயில்களின் டிரைவர்கள், சிவப்பு நிறத்தை பார்த்ததும், ரயிலின்
வேகத்தை குறைத்துக் கொள்கின்றனர். இதனால், மாணவர்கள் பலியாவது
தவிர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நீல நிற சீருடைகளையே, அரசு இலவசமாக
வழங்குகிறது. ஆனாலும், அவர்களின் பாதுகாப்பு கருதி, சிவப்பு சீருடை
வழங்கியுள்ளோம். அரசே சிவப்பு சீருடை வழங்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு
லோக்ரா கூறினார்.
No comments:
Post a Comment