ஈரோடு நகரில் பள்ளிக்கு டூ வீலரை ஓட்டி வரும் மாணவர்கள்
அதிகரித்துள்ளனர். விபத்துக்கள் மூலம் உயிர்பலி ஏற்படும் முன் போலீஸார்
நடவடிக்கையுடன், பெற்றோரிடம் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும்.
ஈரோடு நகர் ஜவுளித்தொழிலில்
அபரிமிதமான வளர்ச்சியடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியால், மாநகராட்சியில்
மக்கள் தொகை ஐந்து லட்சத்தை எட்டியுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார்
தொழிற்கூடங்கள், மார்க்கெட் கடைகள், லாரி, பார்சல் புங்கிங் அலுவலகங்கள்
பெருகியதால், டூவீலர், மினிடோர், சிறிய மற்றும் கனரக வாகனங்கள் என
லட்சக்கணக்கில நகரில் இயக்கி வருகின்றன.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பீக் ஹவரில் கனரக வாகனங்கள்
வரத்தடையும், நாள்தோறும் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபடுகின்றனர். தற்போது
பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடந்து வருகிறது. இதனால் பள்ளிகள் பகுதி
நேரம் மட்டும் செயல்படுவதால், மாணவர்களை அழைத்து வந்து, கூட்டிச்செல்லும்
ஆட்டோ, வேன், பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை.
மாணவர்கள் சுயமாக வந்து செல்லுகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்களிடம்,
பெற்றோர்கள் தங்களின் டூவீலரை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். டூவீலரில்
பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆர்வக்கோளாரில், உடன் படிக்கும் இரண்டு
மாணவர்களை சேர்த்து, மூவராக வலம் வருகின்றனர்.
இவர்களிடம் லைசென்ஸ் இருப்பது இல்லை. போலீஸாரிடம் பிடிபடும் போது,
தேர்வுக்கு செல்வதாகவும், இனிமேல் ஓட்ட மாட்டோம், எனக்கூறி சென்று
விடுகின்றனர். தாறுமாறாக ஓட்டி சாகசம் செய்யும் மாணவர்களால் விபத்துக்கள்
ஏற்பட்டு, உயிர்பலி நேர்கிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் நலன்
கருதி, பள்ளிக்கு டூவீலர் ஒட்டிச் செல்ல அனுமதிக்க கூடாது.
நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரும், டூவீலர் ஓட்டி வரும்
மாணவர்களுக்கு சலுகை வழங்காமல், அவர்களது பெற்றோரை நேரில் வரவழைத்து, உரிய
யோசனை தெரிவிக்க வேண்டும். இதுபற்றி போக்குவரத்து போலீஸார் கூறியதாவது:
தேர்வு, பள்ளிக்கு நேரமாகி விட்டது, ஆட்டோ வரவில்லை என பல காரணம்
கூறுவதால், வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்புகிறோம். சாதாரணமான நேரத்தில்
வரும் சிறுவர்களிடம் வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டு, பெற்றோரை அழைத்து
வரும்படி கூறினால், பெற்றோர் வருவதில்லை.
அதற்கு பதில், பல வி.ஐ.பி., உயர் அதிகாரிகளிடம் இருந்து ஃபோன் வருகிறது.
அப்போது கூட, அந்த வண்டியை லைசென்ஸ் உடைய ஒரு நபர் வந்து எடுத்துச்
செல்வதில்லை. அதே சிறுவன் வந்து எடுத்துச் செல்கிறான். விபத்து, உயிர்பலி
குறித்து முதலில் பெற்றோருக்கும், பரிந்துரைக்கு வரும் ஆளும் கட்சியினர்,
அதிகாரிகளுக்கும் முதலில் இந்த விபரீதம் புரிய வேண்டும். மாணவர்களை
தண்டிப்பதால் பயனில்லை, என்றார்.
No comments:
Post a Comment