எழுத்தாளர், இசைக்கலைஞர் மற்றும் பேராசிரியர் என்ற தகுதிகளையுடைய,
பிரிட்டனின் கிழக்கு ஆங்லியா பல்கலையின் இலக்கிய பேராசிரியர் அமித்
சவுத்ரியின் பேட்டி;
இந்தியாவில், ஆங்கிலத்தை, ஒரு மொழியாக எப்படி பார்க்கிறீர்கள்?
ஆங்கிலம் என்பது, இந்நாட்டில், ஒருவர் நிறைய படித்தவர் என்ற
அடையாளத்தைப் பெறுவதற்கும், சமூகத்தில் ஒரு தனி மரியாதையைப் பெறுவதற்குமான
ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது. இலக்கியமின்றி, ஆங்கிலத்தை நாம் ஒரு
மொழியாகப் பார்க்கிறோம். ஏனெனில், நமது சமூகத்தில், கல்வியின் ஒவ்வொரு
அம்சமும், இயந்திரத்தனமாகவே உள்ளது. இதன் விளைவாகவே, ஐ.டி., நிபுணர்கள்
மற்றும் பல மருத்துவ நிபுணர்கள் போன்றோரை நாம் உருவாக்க விரும்புகிறோம்.
இதன்மூலம், பல வெளிநாடுகளுக்கு சென்று அதிகம் சம்பாதிக்கலாம் என்பது நமது
ஆசை. நமது சிந்தனைகள், ஒரு மூடுண்ட நிலையிலேயே இருக்கின்றன.
வாழ்க்கையின் வேறுபல அற்புதமான அம்சங்களைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை.
அந்த அம்சங்கள் இயந்திரத்தன்மை உடையதல்ல. இலக்கியம், வரலாறு, கட்டடக்கலை
மற்றும் பல்வேறு பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியவை அவை. பெங்காலி, கன்னடம்,
இந்தி மற்றும் உருது போன்ற பல இந்திய மொழிகளைப் பற்றி நாம் சட்டை
செய்வதில்லை. அவற்றை நாம் நமது பழம்பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ள
பழமையான மொழிகளாக பார்க்க வேண்டும்.
இத்தகைய மொழிகள், எழுதுவதின் அழகு மற்றும் இலக்கியப் பாடத்தின்
முக்கியத்துவம் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவை. நாம்
இதுபோன்ற உணர்வையும், அழகியலையும், ஆழ்ந்த சிந்தனையையும் விட்டு
விலகியதால்தான், இயந்திர மனப்பான்மையுடன் இருக்கிறோம்.
நீங்கள், ரவீந்திரநாத் தாகூரின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் போல் இருக்கிறீர்களே?
அப்படியெல்லாம் இல்லை. ஆனால், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் தாகூரும்
ஒருவர். ஆனால், தாகூர், இந்தியாவில், வங்காளத்தை சேர்ந்தவர் என்பதால்
அவர்மேல் உங்களுக்கு தாக்கம் அதிகம் இருக்கலாம். ஆனால், அதேசமயத்தில்,
எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், அவரின் அம்சங்கள் இருப்பதை நான்
விரும்புவதில்லை. கொல்கத்தாவைப் பொறுத்தவரை, எல்லா இடங்களிலும் அவரின்
பாடல்கள் பாடப்படுவதை நம்மால் கேட்க முடியும்.
ஒரு எழுத்தாளராக, பல சிறப்பான பணிகளை அவர் செய்திருக்கிறார் என்பதையும்,
அதேசமயம், முக்கியத்துவமும், சுவாரஸ்யமும் அற்ற பல விஷயங்களையும் அவர்
செய்துள்ளார் என்பதையும் நான் கண்டறிந்துள்ளேன். எனவேதான், நான் இந்த
வித்தியாசத்தை கையாண்டுள்ளேன்.
இலக்கியப் படிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
இலக்கியத்தையும், கலாச்சாரத்தையும் விரிவாக புரிந்துகொள்வதுடன்
தொடர்புடைய, ஒரு புதிய சிந்தனையின் தேவை இப்போது இருக்கிறது. இதை நான்
விரும்புகிறேன். மற்றபடி, எந்த நேரத்திலும், வெறுமனே, இந்திய பொருளாதாரம்,
காந்தி, நேரு மற்றும் தாகூரைப் பற்றி பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. நான்
தாகூரைப் பற்றி பேசினால், பின்னர், அவரை ஒரு சாதாரண எழுத்தாளராக மட்டுமே
வைத்து நான் பேச விரும்புவேன்.
இந்தியாவில் கல்வி எப்படி இருக்கிறது?
ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, இந்தியாவில் பள்ளியில் படிக்கும்
குழந்தைகள், தங்களின் பள்ளிப் படிப்பை சந்தோஷமான ஒன்றாக உணர்வதில்லை.
அதேசமயம், பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்விக்கு நகரும்போது, சற்று
சந்தோஷமான மனோநிலை ஏற்படுகிறது. தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகளின்
முக்கியத்துவம் போன்ற நெருக்கடிகளிலிருந்து சற்று விடுதலையளிக்கும் கல்விச்
சூழல், ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
வருங்காலத்தில், ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்ற விருப்பமுள்ள இளைஞர்களுக்கு, உங்களின் அறிவுரை?
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். மொழியில் கவனம் செலுத்தி, நிறைய
படியுங்கள். உங்களின் எழுத்துக்கு நீங்களே சிறந்த விமர்சகர் என்பதால்,
உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் ஒன்றை எழுதியப் பிறகு,
அதிலிருந்து விலகியிருந்து, அதை மீண்டும் சில வாரங்கள் கழித்து படித்துப்
பார்த்து, நன்றாக இருக்கிறதா என்பதை உணருங்கள். உணர்ச்சிவயப்பட்டு எதிலும்
மயங்கி விடாதீர்கள். நீங்கள் எழுதியது சிறப்பாக இருப்பதாக உணர்ந்தால், அதை
வெளியிடும் வேலைகளைத் தொடங்கலாம். அதேசமயம், அதை யாரும் வெளியிட
முன்வரவில்லை எனில், அதை நீங்களே வைத்திருங்கள்.
நன்றி: கேரியர்ஸ்360
Very good interview
ReplyDelete