பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பல்வேறு மாணவர்களின் சாதனைகளுக்கு
மத்தியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் படைத்துள்ள
சாதனையும், முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்மாணவர்கள், மூவர் முறையே,
480, 475, 473 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,
ஈரோடு, சென்னை உள்ளிட்ட, 15 மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர்கள் அதிகம்
இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, இம்மாவட்டங்களில் உள்ள
குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், "தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு
திட்டம்" கொண்டு வரப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம்
செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தீப்பெட்டி, பட்டாசு
தொழிற்சாலை, செங்கல் சூளை, ரைஸ் மில், பீடி கம்பெனி, ஓட்டல் ஆகிய இடங்களில்
வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட
சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி கற்கின்றனர்.
எந்த வகுப்பில் படிப்பை கைவிடுகின்றனரோ, அதிலிருந்து படிப்பை
மேற்கொள்கின்றனர். இத்திட்டத்தில் கீழ், குழந்தை தொழிலாளராக மீட்கப்பட்ட,
70 ஆயிரம் குழந்தைகள், தற்போது கல்வி கற்று வருகின்றனர். 700 மாணவர்கள்,
10ம் வகுப்பு பொது தேர்வை எழுதினர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், 450
மதிப்பெண்களும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், 400 மதிப்பெண்களும்
பெற்றுள்ளனர்.
விருதுநகர், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் மீட்கப்பட்ட குரு
வித்யா, 480 மதிப்பெண்ணும், தர்மபுரியில் கட்டட வேலையில் இருந்து
மீட்கப்பட்ட கார்த்திக், 475 மதிப்பெண்ணும், திருச்சியில் வீட்டு வேலையில்
இருந்து மீட்கப்பட்ட மகாலட்சுமி, 473 மதிப்பெண்ணும் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
இதுகுறித்து தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட குரு வித்யா
கூறியதாவது: ஐந்து வயது இருக்கும் போது வீட்டில் மிகவும் கஷ்டம். ஒரு வேலை
சாப்பாட்டு கூட வழி இருக்காது. நான்காவது படிக்கும் போது, படிப்பை
பாதியில் விட்டு, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில், வேலைக்கு சேர்ந்தேன்.
10 வயது இருக்கும் போது, என்னை பள்ளியில் சேர்த்தனர். மிகவும்
கஷ்டப்பட்டு படித்தேன். 480 மார்க் வாங்கியுள்ளேன். மேல் படிப்புக்கு
வழியில்லை. யாராவது உதவி செய்தால் படிப்பேன். இவ்வாறு குருவித்யா கூறினார்.
வீட்டு வேலையிலிருந்து மீட்கப்பட்ட மகாலட்சுமி கூறியதாவது: சின்ன வயதில்
தந்தை இறந்து விட்டார். தாய், கட்டட வேலை செய்கிறார். என்னுடன்
பிறந்தவர்கள், இரண்டு பேர். தந்தை இல்லாததால், மூன்று பேரும், குடும்ப
பாரத்தை தாங்க வேலைக்கு வந்துவிட்டோம்.
நானும், என் தங்கையும் வீட்டு வேலைக்கு சென்றோம். எங்களை மீட்ட
அதிகாரிகள், பள்ளியில சேர்த்தனர். மேற்படிப்பில் தொடர, அரசின் உதவியை
எதிர்பார்த்து உள்ளேன். இவ்வாறு மகாலட்சுமி கூறினார்.
Very good achievement.Thanks to those who involved to bringout the child from working place to school.
ReplyDeleteCongrats!!!