கோடை விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து, மீண்டும் பள்ளிப் படிகளில்
காலடி பதிக்க காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும், இந்தாண்டும் பல கனவுகள்,
லட்சியத்துடன் படிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
பத்தாவது மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, "அரசு பொது தேர்வுகள்" என்ற கூடுதல் பொறுப்பும்
காத்திருக்கிறது. மாணவர்கள் திறமைக்கு மதிப்பெண் ஒரு அளவுகோல் இல்லை
என்றாலும், மதிப்பெண்ணே உயர்கல்விக்கு வழிகாட்டுகிறது. மாணவர்கள்
விரும்பும் வகையில் பள்ளிச் சூழல் அமைந்துவிட்டால், படிப்பும்
விருப்பம்போல் அமைந்துவிடும்.
வரும் கல்வி ஆண்டில், பள்ளிக்காலங்கள் எப்படி அமைய வேண்டும் என்ற மாணவர்கள் எதிர்பார்ப்பு இதோ...
கே.பி.ஹரிஷ்குமார் (பத்தாம் வகுப்பு, சவுராஷ்டிரா பள்ளி, மதுரை):
பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் கூடுதல் பொறுப்பு மற்றும் கவனத்துடன் இருக்க
முடிவு செய்துள்ளேன். பயனுள்ள தகவல்களை தவிர, தொலைக்காட்சியில் வரும்
திரைப்படம், பொழுது போக்கு அம்சங்களை ஓராண்டு தியாகம் செய்யவுள்ளேன்.
இதே தியாகத்தை எனது பெற்றோரிடமும் எதிர்பார்க்கிறேன். தெரியாமல் தவறு
செய்யும் மாணவர்களை, ஆசிரியர்கள் அன்புடன் திருத்த வேண்டும். கஷ்டப்பட்டு
படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்கும் சூழலை எதிர்பார்க்கிறேன்.
ஜெ.கல்யாணராமன் (பிளஸ் 2, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,மதுரை):
ஆசிரியர்கள், பாடத்தை தெளிவாக புரியும் படியும், படிக்க ஆர்வத்தைத்
தூண்டும் வகையிலும் நடத்த வேண்டும். ஆசிரியரோ, பெற்றோரோ மற்ற மாணவர்களுடன்
எங்களை ஒப்பிட்டுக் கூறாமல், எங்களின் திறமைக்கேற்ப தனித்தன்மையுடன்
சாதிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்னிடம் உழைப்பு இருந்தாலும், அதை மெருகேற்ற பெற்றோர், ஆசிரியர்களின்
ஒத்துழைப்பு தேவை. என்னிடம் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு முன்னால் சுட்டி
காட்டாமல், தனியாக எடுத்துக் கூறி திருத்த வேண்டும். ஒவ்வொரு பொழுதையும்
படிப்பிற்காக அர்ப்பணிக்க வேண்டும், நல்ல நண்பர்களோடு பழகி, படிப்பு பற்றி
மட்டுமே விவாதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
எஸ்.ஷர்மி, (பிளஸ் 2, எஸ்.எம்.பி.எம்., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்):
தினமும் நடத்தும் பாடங்களை, அன்றே படிக்கவேண்டும். படிப்பதற்கு
குடும்பத்தினரும் ஊக்கம் தரவேண்டும். தினமும் காலை 5 முதல் 6.30 மணி
வரையும், இரவு 6 முதல் 10 மணி வரையும் படிக்க முடிவு செய்துள்ளேன்.
ஆசிரியர்கள் மாணவர்களை, தங்கள் நண்பர்களாக கருத வேண்டும். எங்களின் சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் அக்கறையுடன் பதில் தர வேண்டும்.
என்.சூரஜ் குமார் (பத்தாம் வகுப்பு, நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி, தேனி):
முதல் நாள் நடத்திய பாடத்தில் இருந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு தெளிவு
படுத்திய பிறகு தான், அடுத்த பாடத்திற்கு ஆசிரியர் செல்ல வேண்டும். வாரம்
ஒருமுறை தேர்வு வைத்து,மேலும் சிறப்பாக படிப்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு படிக்கும்
மாணவர்களிடம் பழகுவேன், விவாதிப்பேன். அதிகாலை படிப்பு, ஆரோக்கியமான உணவு,
நல்ல சேர்க்கை, கடின உழைப்பு இவை நல்ல மதிப்பெண் தரும்.
எம்.பவித்ரா (பிளஸ் 2, நேஷனல் அகாடமி, ராமநாதபுரம்):
பாடங்களை டிசம்பர் மாதத்திற்குள் படித்து, அதன்பிறகு, திருப்புதலுக்காக
படிக்க வேண்டும். மாதிரி தேர்வு அதிகமாக எழுத வேண்டும். மாணவர்கள் நல்ல
மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம்.
எனவே, பாடத்தை குழப்பமின்றி தெளிவாக கற்பிக்க வேண்டும். அப்போது தான்
மனதில் பதியும். படிப்பிற்கு உதவும் வகையில் நண்பர்கள், பாடங்கள் தொடர்பாக
விவாதம் செய்ய வேண்டும்.
எம்.கே.சந்தோஷ் (பத்தாம் வகுப்பு, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி சிவகங்கை):
தினமும் காலை 4.30 முதல் 6.30, மாலை 6 - இரவு 11 மணி வரை திட்டமிட்டு
படிப்பேன். ஆசிரியர்கள் நடத்தும் போதே, நன்கு கவனித்தால், பாடம் மனதில்
நிற்கும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், வகுப்பிற்கு
தயாராக வரவேண்டும். பாடம் எடுக்கும்போதே, ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்ற
எண்ணத்தை, மாணவர்களிடம், ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
எம்.சோனியா (பிளஸ் 2, சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் நிறைகுறையை கண்டறிந்து, புரியும்படி கற்பிக்க வேண்டும்.
மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர் தான். பொதுத் தேர்வுக்காக
சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது தேவையற்றது. அன்றைய பாடங்களை அன்றே
படித்தால் போதுமானது. தினமும் காலை 5 முதல் 7 மணி, மாலை 6 முதல் இரவு 8 மணி
வரை படிக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.
No comments:
Post a Comment