"மஹாராஷ்டிரா மாநில அரசின் மராட்டி வளர்ச்சித்துறை
சார்பில், தஞ்சை தமிழ் பல்கலையில் ஆவண காப்பகத்திலுள்ள மோடி ஆவணங்களை
மின்படியாக்கம் செய்து, மொழிபெயர்த்து, தொகுதிகளாக வெளியிடும்
திட்டத்துக்கு, 80 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல்
தரப்பட்டுள்ளது," என தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: "சத்ரபதி சிவாஜியின்
தம்பியாகிய, தஞ்சையின் முதல் மராட்டிய மன்னர் ஏகோஜி துவங்கி, இரண்டாம்
சிவாஜி வரை (கி.பி., 1676-கி.பி., 1855), தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்
அனைவரும், அன்றாட கடித போக்குவரத்து, கணக்கு வழக்கு, நாட்குறிப்பு, அரண்மனை
நிகழ்வு ஆகியவற்றை தாய்மொழியான மராட்டியில், அதற்குரிய சுருக்கெழுத்து
வடிவத்தில் எழுதினர்.
இந்த சுருக்கெழுத்து முறைதான் மோடி எழுத்து எனப்படுகிறது.
மோடி எழுத்து என்பது தேவநாகரி எழுத்தை உடைத்து, சிதைத்து, வேகமாக
எழுதுவதற்கு வசதியாக உருவாக்கப்பட்டது. மோடி எழுத்தில் எழுதப்பட்ட
ஆவணத்துக்கு பயன்பட்ட மொழி மராட்டி. எனவே மராட்டி மொழியும், மோடி எழுத்தும்
தெரிந்திருந்தால் மட்டுமே, இம்மோடி ஆவணத்தை படிக்க முடியும்.
தற்காலத்தில் சுருக்கெழுத்து நோட்டில் எழுதுவதை போன்றே
கோடிட்டு கொண்டு, அதை மையமாக வைத்து மோடி எழுத்துகளில் ஆவணங்களை தயார்
செய்தனர். கடந்த, 1946ம் ஆண்டு, இந்தூரில் கூடிய இந்திய வரலாற்று ஆவண
ஆணையம், மராட்டா ராஜ் ரெக்கார்ட்ஸ் எனப்படும், தஞ்சை மராட்டிய மோடி
ஆவணங்களை, தஞ்சை அரண்மனையிலிருந்து, சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு மாற்ற
தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி ஆவணங்கள் நூலகத்துக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து,
மத்திய அரசு ஆணைப்படி, அவை சென்னை ஆவண காப்பகத்துக்கு மாற்றம்
செய்யப்பட்டன. இதில் ஏ, பி.சி., பிரிவு என, ஆவணங்கள் பிரிக்கப்பட்டு, சி
பிரிவு ஆவணம் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவற்றில், 863 கட்டுகள், மஹாராஷ்டிரா அரசின் உதவியுடன் நுண்படம்
எடுக்கப்பட்டு, தற்போது சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இம்மூல மோடி ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை, தஞ்சை தமிழ் பல்கலை
வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழ் பல்கலை ஆவண காப்பகத்தில், 820 மோடி ஆவண
கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு ஆவண கட்டிலும், 500 முதல், ஆயிரம் எண்ணிக்கை
வரையில், ஆவணங்கள் என்ற அடிப்படையில், ஐந்து லட்சத்துக்கும் மேலான மோடி
ஆவணம் உள்ளன. இதை மின்படியாக்கம் (ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல்
மயமாக்கல்) செய்து, மொழி பெயர்த்து, தொகுதிகளாக வெளியிடும் திட்டத்துக்கு,
80 லட்சம் ரூபாயை மஹாராஷ்டிரா அரசு, தமிழ் பல்கலைக்கு நிதி வழங்க
ஒப்புக்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, 14 லட்சம் ரூபாய் செலவில் மின்படியாக்கம்
செய்ய நிதி ஒதுக்கியுள்ளது. மின்படியாக்கம், மொழிபெயர்ப்பு, தொகுதிகளாக
வெளியீடு என, ஐந்து ஆண்டு காலம் பணி நடக்கும். இதற்காக, மஹாராஷ்டிரா அரசின்
மராட்டி வளர்ச்சித்துறை இயக்குனர் அசோக் சோலன்கர் பல்கலைக்கு
வந்துள்ளார்." இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.
No comments:
Post a Comment