இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள பி.பி.ஓ., துறையானது பேச்சு
மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கி
வருகிறது. திறமைமிக்க தகவல் தொடர்பாளர்கள் இளம் பி.பி.ஓ., துறையினரோடு,
திறமையை பகிர்ந்து கொண்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பல நிறுவனங்கள்
தங்களது செயல்பாடுகளையும், சேவைகளையும் அவுட்சோர்சிங் செய்து வருவதால்
பி.பி.ஓ., துறை வளர்ச்சி பெற்றுள்ளது. பி.பி.ஓ., துறைக்கான முக்கிய அங்கமாக
பேச்சு மற்றும் உச்சரிப்புப் பயிற்சி ஆகியவை விளங்குகின்றன. ஒருவர்
நன்றாகப் பேசும் திறமையை வளர்த்துக் கொண்டால் பேச்சு மற்றும் உச்சரிப்புத்
துறையில் பயிற்சியாளராக முடியும்.
பயிற்சியாளர்கள் குரலை உலகெங்கும் ஒலிக்கச் செய்யும் சக்தி
படைத்தவர்களாக இருக்கிறார்கள். பேச்சின் போது எங்கு நிறுத்துவது, பேச்சு
செல்லும் திசையை கட்டுப்படுத்துவது போன்ற பேச்சுக் கலை நுட்பங்களை இவர்கள்
தெளிவாக விளக்குகிறார்கள்.
தகுதிகள்
பேச்சு மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளராக ஒருவர் உருவாக
கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் பட்டப்படிப்பு ஒன்றில்
தேர்ச்சி என்பது தேவைப்படுகிறது. ஆங்கில இலக்கியத்தில் பட்டம்
பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
இந்தத் துறையில் பணிபுரிய துறை சார்ந்த ஈடுபாடு அவசியம்.
ஆங்கிலத்தில் பொதுவான ஈடுபாடு, ஆழ்ந்த ஆங்கில இலக்கண அறிவு, பயிற்சிக்
காலத்தில் தரப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆகியவை
அவசியம் தேவை.
ஒருவரிடம் ஏற்கனவே உள்ள பேச்சு திறமையை மெருகூட்டுவதே,
பயிற்சியாளரின் பணி. தகவல் தொடர்புத் திறனை வளர்ப்பது, வாடிக்கையாளர்களின்
தன்மையை அறிவது, கவனித்தலின் அவசியம், குரலில் தேவைக்கேற்ப ஏற்ற
இறக்கங்களை பயன்படுத்துவது மற்றும் மென்திறன்கள் போன்ற பிரிவுகளில்
பயிற்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
பணி வாய்ப்புகள்
பல நிறுவனங்களில் பேச்சு மற்றும் உச்சரிப்புப்
பயிற்சியாளருக்கான தேவை இருக்கிறது. மேலும் பல கார்ப்பரேட் கழகங்கள், விமான
நிறுவனங்கள், ரீடெயில் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவர்களுக்கான
வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இப்பணியில் புதிதாக சேருவோருக்கு 22 ஆயிரம்
ரூபாய் முதல் 33 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. இதில் சில ஆண்டு
பணிபுரிந்தவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.
பயிற்சி நிறுவனங்கள்
பெங்களூருவிலுள்ள மைண்ட் ஸ்பீட், அகாடமியா, மும்பையிலுள்ள
லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் பர்சனாலிடி டெவலப்மென்ட், ஆரோஹா,
கான்பூரிலுள்ள அக்யூசென்ஸ், பீப்பிள்ஸ் ட்ரீ போன்ற புகழ் பெற்ற பயிற்சி
நிறுவனங்களில் இத்துறை தொடர்பான சிறப்புப் பயிற்சிப் படிப்புகளைப்
படிக்கலாம்.
No comments:
Post a Comment