"பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும்
தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு)காளிராஜ்
பேசினார்.
மைலேறிபாளையத்திலுள்ள சசி வணிக
மேலாண்மை கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில்
நடந்தது. நிர்வாக அறங்காவலர் ராஜ்தீபன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்
அனிதா வரவேற்றார்.
சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் பேசியதாவது: நமது
நாட்டில், 1957ம் ஆண்டு வரை, மிக குறைந்த எண்ணிக்கையிலான பல்கலை மற்றும்
கல்லூரிகளே செயல்பட்டன. இன்று 650 பல்கலைகள் மற்றும் 32 ஆயிரம் கல்லூரிகள்
உள்ளன.
இதில், 21 ஆயிரம் கல்லூரிகளில் மேலாண்மை படிப்பு கற்றுத்
தரப்படுகிறது.கருப்பு பணம் வைத்திருப்போர், அதனை மாற்ற எளிதான வழியாக இன்று
தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்குகின்றனர். அத்தகைய கல்லூரிகளில்,
கல்வித்தரம் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
அதுபோல கல்லூரிகளில், ஒழுக்கம் மற்றும் கலாசாரமும் குறைந்து வருகிறது.
இக்குறைபாட்டினை நீக்குவதில் மேலாண்மை துறை சார்ந்த படிப்பு முக்கிய
பங்காற்றுகிறது.எந்தவொரு நிறுவனமும் சிறப்பாக செயல்பட, மேலாண்மை துறை
அவசியமாகிறது.
பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும்
தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக்
கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள், காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்.
இம்மாற்றத்திற்கு, அக்கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களின்
பங்கு மிகவும் அவசியமானது. பட்டம் முடித்து வெளியேறுவோர், நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் எந்தவொரு பணியையும் செய்ய வேண்டும். நாம்
மேற்கொள்ளும் வேலை குறித்த நுணுக்கங்களையும், திறமைகளையும்
தெரிந்துகொண்டு, அதனை வளர்க்க வேண்டும்.
பணியில் புதுமையும் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பண்புடன் பழக
வேண்டும். நிறுவனத்தின் கலாசாரத்தை பின்பற்ற பழகிக்கொள்ள வேண்டும். நமது
வாழ்க்கை நமக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment