பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும்
பொருட்டு, சம்பிரதாய கற்பிக்கும் முறைகள், மறுஆய்வு செய்யப்படுகின்றன.
வகுப்பறையோ, கரும்பலகையோ அல்லது வளாகமோ இல்லாத ஒரு பள்ளியை, உங்களால்
கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அதுபோன்றதொரு பள்ளியில்,
குழந்தைகள், அவர்களாகவே முடிவுசெய்த ஒரு கற்றல் செயல்பாட்டில், ஆசிரியர்கள்
பங்கேற்பதை பார்க்க முடியுமா? இத்தகையதொரு சோதனை முயற்சியிலான பள்ளி,
விரைவில் டெல்லியில் அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவில், பள்ளிக் கல்வியானது, மெதுவாக, அதேசமயம், வலுவான முறையில்
மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்
அங்கீகரிக்கிறார்கள். ஏனெனில், மாறிவரும் உலக சூழல்களுக்கேற்ப
குழந்தைகளுக்கு அறிவு வழங்கும் பொருட்டு, இந்த மாற்றம் அவசியமான
ஒன்றாகிறது.
குழந்தைகளை மையப்படுத்திய பள்ளி
குழந்தைகளின் பலவிதமான தேவைகளுக்கேற்ப, பாரம்பரிய கற்பித்தல் முறைகள்,
பெரியளவிலான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. செயல்முறை என்பதில் ஆர்வம்
கொண்ட மற்றும் அதனை ஆதரிக்கும் பெற்றோர், செயல்முறை கற்றல், குழந்தை
மையப்படுத்தப்படுதல் போன்ற விஷயங்களை விரும்புகின்றனர். டெல்லியிலுள்ள
ரிஷிவேலி பள்ளி, கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் மற்றும் வசந்த் வேலி பள்ளி
போன்றவை, EDUCATION WORLD SURVEY 2012 -இல், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
இந்த சர்வேயில், வசந்த் வேலி பள்ளி, முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப்
பள்ளிகளில், சுதந்திரமான கல்வி கொள்கை பின்பற்றப்படுகிறது. ஒரு முழுமையான
கல்வி என்பது, அதிக மதிப்பெண் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டியதில்லை என்று, பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும்
கல்வியாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
மாற்றத்திற்கான முன்னோடி
கற்றலின் பல புதிய அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் தெரிய வந்தபின்னர்,
செயல்முறை கல்வி முறையின்மீது, பெற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
மேற்கூறிய செயல்முறை பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம்
குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றோர்கள் கண்கூடாக பார்க்கும்போது, அவர்கள்
இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள்.
இதுபோன்ற பள்ளிகளில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையில் பல
சந்திப்புகள் நடைபெறுகின்றன. இந்த முறையில், ஆசிரியர் என்பவர் நேரடி
கற்பிப்பவராக இல்லாமல், கற்பதற்கு உதவும் ஒரு நபராகவே இருக்கிறார். இது ஒரு
சுதந்திரமான சூழ்நிலை.
நெகிழ்வான பாடத்திட்டம்
இதுபோன்ற பள்ளிகள், முழுமையான பரிமாணத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்கின்றன என்று சொல்லப்படுகிறது. கல்வி என்பது, ஒரு குழந்தையிடம்
மறைந்துள்ள ஆச்சர்யமான திறன்களை வெளிக்கொணர்வதாக உள்ளது. வெறுமனே ஒரு
விஷயத்தை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வதை விட, உட்கிரகித்து
பிரதிபலிக்கும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பாடத்திட்டமானது, நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதோடு, ஒரு குழந்தையின்
தனிமனித தேவைகளை நிறைவு செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஒருவரின் சொந்த முயற்சியில் கற்றல்
கற்றல் செயல்பாட்டின் மையத்தில், குழந்தையை இடம்பெற செய்யும் வகையில்,
இந்த கல்வித் திட்டம் அமைந்துள்ளது. பாடத்திட்டமானது, படிநிலைகளாகவும்,
கருத்தாக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் மொழிப்
பாடங்கள், அடுத்தடுத்து கற்கப்பட வேண்டும் மற்றும் அவைகள், படிநிலைகளாக
அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாணவரும், படிநிலைகளின் ஊடாக, தனது சொந்த முயற்சியில்
வளர்ச்சியடைகிறார். ஆரம்ப நிலையில், ஒரு மாணவர், படிநிலை கோர்ஸில் சேர்ந்து
கொள்ளலாம். இது, அவர்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் அறிவு தொடர்பானது.
மானுடவியல், கலை, அறிவியல்கள் மற்றும் கணினிகள் ஆகியவை, ஒருங்கிணைந்த
கருத்தாக்க கோர்ஸ்கள்.
இதுகுறித்து தொடர்புடைய வட்டாரங்கள் கூறுவதாவது, ஆரம்ப வயதிலிருந்து,
குழந்தைகள், தாங்களாகவே முயற்சிகள் எடுக்கும் வகையில், அவர்களை நாங்கள்
தயார்படுத்துகிறோம். முதலாம் வகுப்பிலிருந்து, படிநிலைப் பாடங்கள்
அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கணிதம் போன்றவையே
இவை. மற்றவை, NCERT மற்றும் CBSE ஆகியவற்றை மனதில் வைத்து
வடிவமைக்கப்படுகிறது. குழந்தையானது, தனது சொந்த திறமைகளை தானே
மதிப்பிட்டுக் கொள்ளவும், ஒரு முழு ஆண்டிற்கான இலக்கை நிர்ணயித்துக்
கொள்ளவும், ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கற்றலை எளிமையாக்கல்
மேற்கூறிய பள்ளிகள் அனைத்திற்குமுள்ள ஒரு தனித்தன்மை என்னவெனில்,
ஒவ்வொரு குழந்தையின் மீதும், தனித்தனியாக காட்டப்படும் அக்கறைதான்.
குழந்தைதான், கற்றலின் மையம். இந்த கல்வி முறையில், ஆசிரியர்கள்,
குழந்தைகளிடம் பேசுவதற்கு பதிலாக, குழந்தையின் மேம்பாட்டு செயல்பாட்டில்,
ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் செயல்படுகிறார்கள். மேலும், தங்கள்
குழந்தையின் அவ்வப்போதைய நிலை குறித்து அறிந்து, அதற்கேற்ப செயல்படும்
கடமை, பெற்றோருக்கும் உண்டு.
போட்டிகளும், ஒப்பீடுகளும் இல்லை
இந்த கல்வி முறையில் இருக்கும் ஒரு முக்கிய அம்சமே, இதில்,
மாணவர்களுக்கிடையிலான ஒப்பீடுகளோ அல்லது போட்டிகளோ கிடையாது. இங்கே, ஒரு
குழந்தையின் சந்தோஷம் என்பது, அது போட்டியில் வெல்வதால் அல்ல. மாறாக, அதன்
தனிப்பட்ட முயற்சி மற்றும் வெற்றியால் வருவதாகும். பல பெற்றோர்களும்,
தங்கள் குழந்தைகளை கொடுமையான போட்டி சூழல்களிலிருந்து பாதுகாக்கவே
விரும்புகிறார்கள்.
இங்கே, போட்டி மனப்பான்மையை, மாணவர்களிடம், ஆசிரியர்கள் வளர்ப்பதில்லை.
ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் தனக்கான ஒரு தனி பரிணாமத்தைக்
கொண்டிருக்கும். எனவே, ஒருவரை, இன்னொருவரோடு ஒப்பிடுவது சரியான ஒன்றாக
இருக்காது. ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில், இந்த
கல்வித்திட்டமானது, அக்கறை செலுத்துகிறது. ஒரு குழந்தைக்கு நிஜ செயல்முறை
அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
தற்போதைய நடைமுறை பள்ளிகள்
பல நிலைகளில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கூறிய செயல்முறை
கற்றலுக்கான பள்ளிகள், பரவிவரும் நிலையில், கல்வியின் பல சிறப்பம்சங்களை
தன்னுள் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே, தற்போதைய கல்வி
முறையிலும் ஈடுபட்டு வரும் பள்ளிகளும் இருக்கின்றன. டெல்லியின் ஸ்ரீராம்
குழும பள்ளிகள் இதற்கு உதாரணம். ஒரு குழந்தை தனது சாதனையை நிகழ்த்துவதற்கான
சரியான வாய்ப்புகள் கொடுப்பதற்கு, இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
இரண்டு உலகிலும் சிறந்தது
கல்வியில் முற்றிலும் புதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ள சிரமப்படும்
நபர்களுக்கு, ஸ்ரீராம் பள்ளிகள் சிறந்த மாற்று. ஏனெனில், மேலே கூறியவாறு,
பாரம்பரிய கல்விமுறை மற்றும் மாற்று கல்வி ஆகிய இரண்டும் இங்கே சிறப்பான
முறையில், பேலன்ஸ் செய்யப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. பள்ளி நடைமுறையில் அளவுக்கதிகமான
சுதந்திரம் வழங்கப்பட்டாலும், அது குழந்தைகளின் மனஓட்டத்தை பாதித்துவிடும்.
அனைத்து குழந்தைகளுமே, தாங்களாக, இலக்குகளை நிர்ணயித்து விடுவதில்லை.
சிலவகையான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என்பது அவசியமாக உள்ளது.
மாற்றுமுறை கல்வியில் பல பெற்றோர்கள் தயக்கம் காட்ட காரணம், அதில்
பெற்றோர்களின் பங்களிப்பு அதிகம் என்பதால்தான். ஏனெனில், தங்களின்
நெருக்கடியான பணி சூல்களுக்கு மத்தியில், இதற்கான நேரத்தை அவர்களால் செலவிட
முடியவில்லை. எனவே, அதுபோன்ற பெற்றோர்கள், இரண்டு கல்வி முறைகளிலும் கவனம்
செலுத்தும் பள்ளிகளையே விரும்புகிறார்கள்.
புதிய நூற்றாண்டுக்கான மாற்றம்!
கல்விமுறை குறித்து இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் பெரிய சிந்தனை
மாற்றம், வரவேற்கத்தக்கது மற்றும் பாரட்டுக்குரியது. சிறந்த கல்வி என்பதை,
மதிப்பெண்களை கோட்டைவிடுவது என்பதாக பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
மாறாக, வாழ்க்கைக்கு தேவையான பல திறன்களை, தங்கள் பிள்ளைகள்
வளர்த்துக்கொள்வதற்கு உதவும் கல்வியே அவர்களின் இலக்காக உள்ளது.
குறிப்பு
கல்விமுறையில் ஏற்படும் எந்த புதிய மாற்றங்களும், அனைத்து மக்களுக்கும்
கிடைக்கும்படி இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பள்ளிகளில் சாதாரண
குடும்பத்து குழந்தைகள் சேர முடியுமா? என்ற கேள்வி எழுவது இயற்கையே. எனவே,
அனைவருக்கும் கல்வி என்ற வெற்று கோஷத்தைவிட, அனைவருக்கும் சிறப்பான கல்வி
என்ற நடைமுறை செயலாக்கமே, அனைத்து மனிதர்களுக்கும் நன்மையளிப்பதாக
இருக்கும்.
No comments:
Post a Comment