"ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்"
என, பயிற்சி வகுப்பில் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஜோஸப் அலெக்ஸாண்டர்
பேசினார்.
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயற்சி வகுப்பு, திருச்சி
ராமலிங்க நகர் சிவானந்த பாலாலயாவில் நேற்று நடந்தது. இதில், அண்ணாமலை
பல்கலை இணை பேராசிரியர் ஜோஸப் அலெக்ஸாண்டர் பேசியதாவது:
பெற்றோர்களை விட, ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம்
நம்புகிறார்கள். அதனால், ஆசிரியர்கள் அதிக விஷயங்களையும் தெரிந்து
வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் நடக்கும் விஷயங்கள், குழந்தைகளின்
செயல்பாடு, பள்ளிகள், வீடு, சமுதாயத்தில் நடக்கும் செயல்பாடுகள் மூலம்
ஆசிரியர் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மதிக்கப்படும்
ஆசிரியர்களாக திகழ முடியும்.
ஏழை, பணக்காரர், நன்றாக படிக்கும் மற்றும் படிக்காத
குழந்தைகள் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். பள்ளிக்கு வந்துவிட்டால்,
அனைத்து குழந்தைகளையும் ஒரே நிலைப்பாட்டில் தான் நடத்த வேண்டும்.
குழந்தைகளை பள்ளிகளில் சிறப்பாக உருவாக்கி இருந்தாலும்,
அவர்கள் வீடுகளுக்குச் சென்றவுடன் அவர்களது செயல்பாட்டில் மாற்றம்
ஏற்படுகிறது. சமயங்களில் இது மோசமாக மாற்றங்களை கூட ஏற்படுத்துகிறது.
எதற்கெடுத்தாலும், ஆசிரியர்களை குறை கூறும் மனப்பான்மை
பெற்றோரிடம் உள்ளது. இதை மாற்ற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். பாடம்
மட்டுமின்றி நல்லொழுக்கங்களை குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். இவ்வாறு
அவர் பேசினார்.
No comments:
Post a Comment