சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்த, சென்னை மாணவிக்கு,
பாஸ்போர்ட் எண் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் தலையீட்டால்,
பறிபோகும் நிலையில் இருந்த வாய்ப்பு, கைகூடியது.
சென்னை, கோபாலபுரம் பகுதியில்
உள்ள பள்ளியில், அந்த மாணவி, பிளஸ் 2 முடித்தார். சிறுவயதில், மாணவியின்
தாயாரும், தந்தையும், பிரிந்து விட்டனர். விவாகரத்து பெற்ற பின், தாயார்
மறுமணம் செய்து கொண்டார். பள்ளியில் மாணவி சேர்ந்த போது, பள்ளி ஆவணங்களில்,
வளர்ப்பு தந்தையின் பெயர் இடம் பெற்றிருந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கும், சிங்கப்பூரில் உள்ள, தேசிய
பல்கலைகழகத்துக்கும் இடையே உள்ள ஒப்பந்தப்படி, பிளஸ் 2 படிப்பில் நன்கு
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பல்கலைகழகத்தில் இடம் அளிக்க வேண்டும்.
அதன்படி, பள்ளிக்கு வந்த பல்கலைக்கழக ஊழியர், அந்த மாணவியிடம் நேர்முகத்
தேர்வு நடத்தினார். சிங்கப்பூரில் உள்ள பல்கலையில், அந்த மாணவிக்கு இடம்
கிடைத்தது.
பாஸ்போர்ட் எண் அளித்தால் தான், மாணவியை சேர்த்ததற்கான அனுமதி சீட்டு
தரப்படும் என, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் தெரிவித்தது. இங்கு தான் பிரச்னை
ஆரம்பமானது. பிறப்பு சான்றிதழில், மாணவியின் தந்தை பெயரும், பள்ளி
சான்றிதழில், வளர்ப்பு தந்தையின் பெயரும் இருந்ததால், பாஸ்போர்ட்
விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை.
வளர்ப்பு தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றால், கோர்ட் உத்தரவு
பெற வேண்டும் என, பாஸ்போர்ட் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம்,
27ம் தேதிக்குள், பாஸ்போர்ட் எண்ணை வழங்க வேண்டும் என்றும்,
இல்லையென்றால், தேர்வு ரத்தாகி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், மாணவி சார்பில், மனுத் தாக்கல்
செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி வேணுகோபால் பிறப்பித்த உத்தரவு:
மாணவியின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில்
சேர்வதற்கு வசதியாக, குறிப்பிட்ட தேதிக்குள், பாஸ்போர்ட் எண்ணை வழங்க
வேண்டும்.
எனவே, மனுதாரர் தரப்பில் அளிக்கப்படும் விண்ணணப்பத்தை உடனடியாக பெற்று,
வளர்ப்பு தந்தையின் பெயரை பயன்படுத்தி, பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment