பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்,
குமாரபாளையத்தில் உள்ள, எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரியின் நிர்வாக
அதிகாரி, பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்லூரி, 15
ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறைகளின்
படி, தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் வசதிகள் உள்ளன. இந்த
கல்வியாண்டுக்கான ஒப்புதலை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., மறுத்து விட்டது.
கல்லூரியின் விண்ணப்பத்தை, பரிசீலித்து, இறுதி உத்தரவு பிறப்பிக்கும்படி,
ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட், கடந்த, ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவின்படி,
"ஆலோசனை, பரிந்துரைகளை மட்டுமே, ஏ.ஐ.சி.டி.இ., வழங்க முடியும்; அதன்
பரிந்துரைகளை, பல்கலைக்கழக மான்யக் குழு மூலம் தான், அமல்படுத்த முடியும்"
என கூறப்பட்டுள்ளது.
எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து, ஒப்புதல் பெற வேண்டும் என, அண்ணா
பல்கலை கழகம் நிர்ப்பந்திக்க முடியாது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் தேவை
என, நிபந்தனை விதிப்பது, பல்கலைக்கழக மான்யக் குழுவின் விதிகளுக்கு
முரணானது. எனவே, அண்ணா பல்கலையின் நிபந்தனைக்கு தடை விதிக்கவில்லை என்றால்,
எங்கள் கல்லூரியை, ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு,
அனுமதிக்க மாட்டார்கள்.
அண்ணா பல்கலையின் நிபந்தனைக்கு தடை விதிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.,யின்
ஒப்புதல் தேவை என வற்புறுத்தாமல், எங்கள் கல்லூரியை, ஒற்றைச்சாளர முறையில்
மாணவர்கள் சேர்க்கை பட்டியலில், இடம் பெற உத்தரவிட வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவை என, நிபந்தனை விதிப்பதை, ரத்து செய்ய
வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில்,
வழக்கறிஞர் கந்தன் துரைசாமி ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அண்ணா
பல்கலை, தொழிற்கல்வி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சசிதரன்
உத்தரவிட்டார். விசாரணையை, இம்மாதம், 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment