"தனியார் பள்ளிகளில் உள்ள இட பரப்பளவிற்கு ஏற்ப, எத்தனை மாணவ, மாணவியர்
வரை அனுமதிக்கலாம் என்பதை, வரையறுக்க வேண்டும்" என தமிழக அரசு நியமித்த
வல்லுனர் குழுவிடம், பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசு நிர்ணயித்த,
குறைந்தபட்ச இடவசதி இல்லாததால், 1,500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்,
அங்கீகாரம் இல்லாமல், தவித்து வருகின்றன. "ரைட் டு எஜுகேஷன்" சட்டப்படி,
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், இயங்கக் கூடாது.
இதனால், இடபிரச்னை காரணமாக, அங்கீகாரம் பெறாமல் உள்ள பள்ளிகளின்
பிரச்னையை தீர்க்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுனர்
குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இக்குழுவில், சி.எம்.டி.ஏ., ஊரக
வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள்,
உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, ஏற்கனவே சில சுற்றுக்கள் கூடி, ஆலோசனை நடத்தியது. இந்த
விவகாரம் தொடர்பாக, பொது மக்கள், பள்ளி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள்,
பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம்,
கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில், அரசுக்கு பரிந்துரை அறிக்கையை
அனுப்ப, குழு முடிவு செய்தது.
அதன்படி, முதல்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
திருவண்ணாமலை, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு
கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில், நேற்று நடந்தது.
500க்கும் மேற்பட்டோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை,
இணை இயக்குனர் கார்மேகம் உள்ளிட்ட குழு, கருத்துக்களை கேட்டறிந்தது.
நந்தகுமார் - நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர்: நில பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பழைய பள்ளிகள், அரசு, புதிய விதிமுறைகளை வகுத்து வெளியிடுவதற்கு
முன்பிருந்தே, பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. நிலத்தின் மதிப்பு, பல
மடங்கு உயர்ந்துவிட்ட இந்த காலத்தில், அதிகளவில் இடம் வாங்குவது,
நடைமுறையில் சாத்தியம் இல்லை.
எனவே, அனைத்து தரப்பினரும் பாதிக்காமல் இருக்க, புதிய விதிமுறையில்
இருந்து, பழைய பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளித்து, தமிழக அரசு உத்தரவிட
வேண்டும். அல்லது, பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப, குறிப்பிட்ட
எண்ணிக்கையில், மாணவ, மாணவியர் படிப்பதை அனுமதித்து, உத்தரவிடலாம்.
உசேன்பாபு - சிறுபான்மை பள்ளிகள் சங்க நிர்வாகி: ஒரு
சதுர அடி, 200 ரூபாய், 300 ரூபாய் என, ஒரு கால கட்டத்தில் விலை இருந்தது.
தற்போது, பல ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. இது போன்ற நிலையில்,
பள்ளிக்கு பக்கத்தில் உள்ள இடத்தை வாங்க, நாங்கள் விரும்பினாலும், யாரும்
கொடுக்க முன்வருவதில்லை.
நாங்கள், மிரட்டியா வாங்க முடியும்? இந்த பிரச்னையை, வல்லுனர் குழு
புரிந்து கொண்டு, அனைவரும் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சல்மான் கான் - பெற்றோர்: 1,500 மாணவர் படிக்க வேண்டிய
பள்ளியில், 3,000 மாணவர்கள் படிக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளில், தரமான
கல்வியை எப்படி வழங்க முடியும்? மாணவர்களால் தான், எப்படி படிக்க முடியும்?
அரசே ஏற்று நடத்த வேண்டும்குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக
மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை, தமிழக அரசு ரத்து செய்ய
வேண்டும். அது போன்ற பள்ளிகளை, அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சந்திரசேகரன் - பள்ளி நிர்வாகி, திருச்சி: நாடு
முழுவதும் உள்ள பள்ளிகளில், 94 சதவீத பள்ளிகள், அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகள் தான். 6 சதவீத பள்ளிகள் மட்டுமே, தனியார்
பள்ளிகள். இந்த, 6 சதவீத பள்ளிகளுக்காக, அடுக்கடுக்காக, பல்வேறு சட்டங்கள்
கொண்டு வந்து, நெருக்கடி தரப்படுகிறது. அதிலும், கும்பகோணம் பள்ளி தீ
விபத்து சம்பவத்திற்குப் பின், நெருக்கடி அதிகரித்து வருகிறது.
குழு தலைவர் தேவராஜன் பேசுகையில், "ஏராளமானோர், கூட்டத்தில் பங்கேற்று
இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கருத்துக்கள் அனைத்தையும்,
முழுமையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில், அரசுக்கு, பரிந்துரை அறிக்கையை
அனுப்புவோம்.
இதர மாவட்டங்களில், கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியபின், ஒட்டுமொத்த
கருத்துக்கள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவு செய்யப்படும்"
என்றார்.
No comments:
Post a Comment