தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி,
அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும்
என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், "கத்திரி"
வெயில் வாட்டி எடுக்கும். இந்தாண்டுக்கான "கத்திரி" வெயில், கடந்த, 4ம்
தேதி துவங்கியது. "கத்திரி" துவங்கியது முதலே, தமிழகம் முழுவதும் தொடர்ந்து
வெயில் வாட்டி எடுத்தது.
"கத்திரி" வெயில் நேற்றுடன் முடிவடைந்தும், வெயிலின் தாக்கம் குறைய, ஒரு
சில வாரங்கள் ஆகும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு
ஆண்டும், பள்ளிகள் திறப்பதற்கு முன், வெயில் தாக்கம் குறித்து
பரிசீலிக்கப்படும். அதன்படி, பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும்.
வெயிலின் தாக்கம் குறையாததால், புதுச்சேரி அரசு, பள்ளிகளின் திறப்பு
தேதியை, ஜூன், 3ம் தேதியில் இருந்து, 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில், தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளின் திறப்பு தேதியை, ஒரு
வாரத்திற்கு தள்ளி வைக்கலாமா என்பது குறித்து, தமிழக அரசு, தீவிரமாக
ஆலோசித்தது.
இந்நிலையில், பள்ளிகல்வி இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு 2013-14ம் கல்வியாண்டில், தமிழகத்தில்
இருக்கும் அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதி துவங்கும் என, முன்பு
அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன்
கருதி, அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி
துவங்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment