மாநில அளவில் சமஸ்கிருதம் மொழி பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி
ரக்ஷனா, "இருதய சிறப்பு மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என
தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி பாடம் எடுக்காததால், 500க்கு, 499
மதிப்பெண்கள் பெற்றும் மாநில அளவில் முதலிடம் பெறமுடியவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்டம்,
கும்மிடிப்பூண்டி அடுத்த, பஞ்செட்டியில் உள்ள, வேலம்மாள் மெட்ரிக் மேனிலைப்
பள்ளி மாணவி ரக்ஷனா, 500 மதிப்பெண்களுக்கு, 499 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர், மொழி பாடமாக, சமஸ்கிருதம் தேர்வு செய்து படித்துள்ளார்.
சமஸ்கிருதம் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்
முதலிடம் பிடித்துள்ளார். பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்,
சமஸ்கிருதம்-100, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100,
சமூகஅறிவியல்-100, மொத்தம், 499 மதிப்பெண்கள்.
நீலகரி மாவட்டம், குன்னூர் அடுத்த, சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த
சிவகுமார் - நர்மதா தம்பதி மகள், ரக்ஷனா. இவரது தந்தை பஞ்செட்டி பகுதியில்
உள்ள வேலம்மாள் சர்வதேச பள்ளியில் மாணவர்கள் நல அலுவலராகவும், தாய் நர்மதா,
அதே பள்ளியில் நூலகராகவும் பணியாற்றி வருகின்றனர்.
சமஸ்கிருதம் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவி
ரக்ஷனா கூறியதாவது: மாநில அளவில், மொழி பாடத்தில் முதல் இடம்
பிடித்துள்ளது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலத்தில், இதய சிறப்பு
மருத்துவம் படித்து, ஏழைகளுக்கு சேவை செய்வதே என் லட்சியம். இதற்கான
கடுமையான உழைத்து படித்து மருத்துவர் ஆவேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அளவில், 500 மதிப்பெண்களுக்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்
மொழி பாடம் படிக்காததால், இவர் முதலிடம் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இதே பள்ளியில் படித்த மாணவி பெரியல் பிப்புல்லா, 500க்கு, 496 மதிப்பெண்
பெற்று பள்ளி இரண்டாவது இடமும், மாநிலத்தில் மூன்றாமிடமும், மோகன்ராஜ்,
500க்கு, 495 மதிப்பெண் பெற்று பள்ளி மூன்றாம் இடமும், மாநிலத்தில்
நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment