10ம் வகுப்பு தேர்தவில் முதலிடம் பிடித்த மாணவிகள் 9 பேர் தங்களின் ஆசைகளையும், எதிர்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் அளித்த பேட்டிகள் விவரம் வருமாறு:
நியூராலஜிஸ்ட் ஆக விருப்பம் - அனுஷா: தந்தை சிவசங்கர்;
தாய் கன்யா; இருவருக்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில்,
அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணி. பள்ளி: கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப்
பள்ளி, பெருந்துறை. மொத்த மதிப்பெண்:498.
வகுப்பில் முழுமையாக பாடங்களை கவனிப்பேன். படித்ததை அன்றன்றே எழுதிப்
பார்ப்பேன். பள்ளி வாலிபால் டீமில் உள்ளதால், தினமும் குறித்த நேரம்
வாலிபால் பயிற்சி எடுப்பேன். "ஸ்டேட் லெவல் பிளேயராக" உள்ளேன். மருத்துவம்
படித்து, நரம்பியல் நிபுணர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
திட்டமிட்டு படித்ததால் சாதிக்க முடிந்தது - ஜி.பி.எம். தீப்தி: தந்தை: பாலாஜி, பள்ளி ஆசிரியர்; தாய்: மல்லீஸ்வரி. பள்ளி: பஸ்கோஸ் பள்ளி, மதுரை. மொத்த மதிப்பெண்:498.
பள்ளியில், ஆசிரியர்கள் தினமும் நடத்தும் பாடங்களை, அன்றைக்கே
வீட்டிலும் படித்து முடிப்பதில், கவனமாக இருந்தேன். ஒரு நாளைக்கு, ஐந்து
மணிநேரம் வரை படித்து, அதை ஒரு முறை எழுதி பார்த்தேன். கடின உழைப்பும்,
ஆர்வமும் இருந்தால், எளிதில் வெற்றி பெற முடியும். திட்டமிட்டு படித்ததால்
சாதிக்க முடிந்தது.
டாக்டராகி சேவை செய்ய விருப்பம் - காயத்ரி: தந்தை:
முருகன், அரசுபேருந்து கண்டக்டர்; தாய்: தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியை,
அரசு துவக்கப் பள்ளி. பள்ளி: மான்ட்போர்ட் மெட்ரிக்.,மேல்நிலைப் பள்ளி,
மணப்பாறை. மொத்த மதிப்பெண்: 498.
மாநில ரேங்க் எடுக்க வேண்டும் என, என் அறையில் எழுதி வைத்துள்ளேன். அதை,
ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது, எனக்குள் ஏற்பட்ட தன்னம்பிக்கை
காரணமாக, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். எதிர்காலத்தில், இதய
பிரிவுக்கான டாக்டராகி, இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை லட்சியமாக
கொண்டுள்ளேன்.
டாக்டர் ஆகி சேவை செய்வதே குறிக்கோள்- மார்ஷியா ஷெரின்:
தந்தை: தனபால், உதவி இயக்குனர், புள்ளியல் துறை; தாய்: டெய்ஸின் மேரி,
அரசுபள்ளி ஆசிரியை. பள்ளி: மான்ட் போர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி,
மணப்பாறை. மொத்த மதிப்பெண்: 498.
மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என, நினைக்கவில்லை. புத்தகம் மூலமே
படித்தேன். நோட்ஸ் வாங்கி படிக்கவில்லை. ஆசிரியர்கள் புத்தகத்தில்
குறித்துக் கொடுக்கும் முக்கிய வினாக்களை, பள்ளியிலேயே படித்து விடுவேன்.
எதிர்காலத்தில், டாக்டராகி, மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக
வைத்துள்ளேன்.
டாக்டராக ஆசைப்படுகிறேன் - பொன் சிவசங்கரி: தந்தை:
கதிர்வேல், விவசாயம்; தாய்: ராஜேஸ்வரி. பள்ளி: இந்து கல்வி நிலையம்
மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஈரோடு. மொத்த மதிப்பெண்: 498.
அன்றைய பாடத்தை அன்றே படித்து, எழுதிப் பார்ப்பேன். தேர்வுகளை முழு
அளவில் எழுதி, சரி பார்ப்பேன். ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் உண்டு.
பிளஸ்1ல், உயிரியல் எடுத்து படிக்க உள்ளேன். எதிர்காலத்தில், டாக்டராக
ஆசைப்படுகிறேன்.
விஞ்ஞானியாக விருப்பம் - சாருமதி: தந்தை:
சக்கரவர்த்தி, முன்னாள் ராணுவ வீரர்; தாய் சுமதி, ஆசிரியை. பள்ளி:
பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி. திருப்பத்தூர்.
மொத்த மதிப்பெண்: 498.
மாநிலத்தில் முதலிடம் வருவேன் என, எதிர்பார்க்கவில்லை. வகுப்பில்
ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படித்து விடுவேன்; நன்றாக விளையாடுவேன்.
ஐ.ஐ.டி.,யில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே லட்சியம்.
டிவி பார்க்காத நெல்லை மாணவி - சோனியா: தந்தை:
பாலமுருகன்,சித்தா டாக்டர்; தாய்: பபிதாதேவி, நெல்லை மருத்துவக்
கல்லூரியில் உதவி பேராசிரியை. பள்ளி: ஸ்ரீஜெயேந்திரர் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளி, திருநெல்வேலி. மொத்த மதிப்பெண்:498.
பள்ளியில், தினமும் தேர்வுகள் நடத்துவதாலும், அதிகாலை மற்றும் இரவில்
படித்ததாலும் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இந்த ஆண்டு முழுவதும், டிவி
பார்க்கவில்லை.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்- துர்கா தேவி:
தந்தை: ராஜகோபால், அண்ணாமலை பல்கலையில் முதுநிலை கண்காணிப்பாளர்; தாய்:
ரமா. பள்ளி: வீனஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம். மொத்த மதிப்பெண்:
498.
பாடத்தை நன்கு புரிந்து படித்தேன்; தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே
படிப்பேன்; பதட்டம் இல்லாமல் ரிலாக்சாக படித்ததால், இந்த வெற்றியை அடைய
முடிந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்.
ஏரோனாடிகல் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் - வினுஷா:
தந்தை: சவுந்தரராஜன், தனியார் நிறுவனத்தில் பெயின்டிங் சூப்பர்வைசர்; தாய்:
கீதா. பள்ளி: ஆக்சீலியம் மேல் நிலைப்பள்ளி, வேலூர். மொத்த மதிப்பெண்: 498.
மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என, எதிர்பார்க்கவில்லை. என் சகோதரி
அனுஷா பாடங்கள் சொல்லித் தந்ததால், இந்தளவு மதிப்பெண் வாங்கினேன்.
ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்.
No comments:
Post a Comment