இன்றைய பொருளாதார சூழலில் பட்டம் முடித்தவர்களுக்கு பொருத்தமான வேலை
கிடைப்பது என்பது பல்வேறு சிரமங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு புறம் புதிய
வேலைகள் உருவாகி வந்தாலும், படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற
விகிதத்தில் இந்த எண்ணிக்கை இல்லை.
மறுபுறம், ஒரு தனி
நபர் தனக்கு தகுந்த வேலையைப் பெறும் வரை அவரது தேவைகளை நிறைவேற்றுவதிலும்
சிரமங்கள் உள்ளது. அதே போல் ஒரு வேலை கிடைக்கும் பட்சத்திலும், பெருகி
வரும் போக்குவரத்து நெரிசல், இட மாற்றம், போதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்
போன்றவற்றால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது என்பது இந்தியாவில் மெதுவாக
புகழ் பெறத் துவங்கியுள்ளது.
அப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கான வழிகள் நிறைய
இருந்த போதும் இவற்றுள் முதன்மையான ஐந்து பிரிவுகள் என்னென்ன என்பதைப்
பார்ப்போம்.
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்
இந்தியாவில் ஆங்கில மொழி தெரிந்தவர்கள் அதிகம்
இருக்கிறார்கள். இவர்களின் திறமையை உபயோகித்து அமரிக்கா உள்ளிட்ட நாடுகளின்
மருத்துவமனைகளுக்கான ரிபோர்ட்களை ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவமாக
மாற்றுவதுதான் இந்த பணியின் முக்கிய வேலையாகும். இந்தப் பணியை செய்வதற்கு
மருத்துவத் துறை சார்ந்த பரிச்சயம் கட்டாயத் தேவையாக உள்ளது. இண்டர் நெட்
வாயிலாக பெறப்பட்ட வாய்ஸ் பைலை கேட்டுக் கொண்டே அதனை எம்.எஸ்., வேர்டு
பைலாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இவற்றுக்கு பக்கங்கள் அடிப்படையில் ஊதியம் பெற முடியும்.
இந்தப் பணியை நேரடியாகவும், இதற்காக உள்ள ஏஜென்சிகளின் வாயிலாகவும் செய்ய
முடியும். இந்தப் பணியை இதற்கென்று பிரத்யேகமாக உள்ள ஒரு வருட சான்றிதழ்
படிப்பை உரிய கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்துவிட்டு செய்ய வேண்டும்.
இந்தப் பதவியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை
ஊதியம் ஈட்ட முடியும்.
புரூப் ரீடர்
நன்றாக எழுதுவது மற்றும் எழுத்து வடிவத்தை எடிட்டிங்
செய்யும் திறமை பெற்றவர்களுக்கான பணியாகும் இது. எழுத்து வடிவத்தை
விரிவாகப் படிக்கும் திறமை, நல்ல ஆங்கில மொழியறிவு, வெகு நேரத்திற்கு ஊன்றி
கவனிக்கும் திறமை, நல்ல தகவல் பரிமாற்றத் திறன் போன்றவை இந்தப் பணியில்
ஈடுபடத் தேவைப்படும் காரணிகள் ஆகும்.
வெளியிடத் தகுந்த படைப்புகளை இலக்கணப் பிழை இன்றி, டைப்பிங்
பிழைகள் இன்றி இருப்பதோடு படிப்பதற்கு ஏதுவான மொழியில் இருப்பதையும்
இந்தப் பணியில் உறுதி செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணியை பொதுவாக
செய்தித் தாள், புத்தகங்கள், இதழ்கள், ஐ.டி., சார்ந்த பணிகள், குறிப்பிட்ட
பிரிவினருக்கான பிஸினஸ் ரிபோர்ட் மற்றும் அகடமிக் ரிபோர்ட் போன்றவற்றிற்காக
செய்ய வேண்டியிருக்கும். இந்த வேலையை செய்வதற்கு பட்டப் படிப்பு
தேவைப்படுவதுடன் மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக திறமைகளும் தேவைப்படும்.
இந்தப் பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 4.5 லட்சம் வரை ஊதியம்
ஈட்ட முடியும்.
டிரான்ஸ்லேட்டர்
ஒன்றுக்கு மேற்பட்ட மொழியறிவு பெற்றவர்களுக்கான வேலையாகும்
இது. எழுத்து அல்லது ஒலி வடிவ பைல்களை எந்த மொழிக்கு மாற்ற வேண்டுமோ
அதற்கு மாற்றித் தருவது இந்தப் பணியின் அடிப்படை அம்சமாகும்.
அப்படி மொழி மாற்றம் செய்யும் போது, அர்த்தங்கள்
ஒத்திருப்பதுடன் பிழைகள் இன்றியும், படிப்பதற்கு தகுந்த முறையிலும் அவை
மாற்றப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் வந்த போது கூட இந்தப் பதவியை
செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அறிவியல் மற்றும்
தகவல் தொழில் நுட்ப மாற்றங்களினால் கூட எந்தவிதத்திலும் தனது மதிப்பை
இழக்காததுமான வேலையாகும் இது.
அது மட்டுமன்றி டிரான்ஸ்லேட்டர்களுக்கு மிக நல்ல ஊதியங்கள்
வழங்கப்படுவதுடன், எப்போதும் வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன
என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வேலையை செய்வதற்கு எந்த பிரத்யேக
படிப்பும் தேவையில்லை. இந்த வேலையின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 15
லட்சம் வரை கூட சம்பாதிக்க முடியும்.
டியூட்டர்
தொலை நிலைக் கல்வி மற்றும் இலேர்னிங் என்ற துறைகளின்
வளர்ச்சியின் காரணமாக டியூட்டர் எனப்படும் பதவி பிரசித்தி பெறத்
துவங்கிவிட்டது. குறிப்பிட்ட பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருப்பதுடன்
ஆழ்ந்த அறிவு, மாணவர்களை ஊக்குவிக்கும் திறமை, பொறுமை உடையவர்கள் இந்தத்
துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்தல், பாடத்தை உரிய
விதத்தில் புரிய வைத்தல், இன்று புகழ் பெற்றுவரும் ஆடியோ மற்றும் வீடியோ
கான்பரன்சிங்களில் பங்கெடுத்தல், மாணவர்களின் கேள்விகளுக்கு விடைதருதல்,
டிஸ்கஷன் பாரம்களையும், சாட் ரூம்களையும் நிறுவி நடத்துதல் போன்றவற்றை
இந்தப் பிரிவில் செய்ய வேண்டியிருக்கும்.
தனிமனித அடிப்படையிலும், ஊதிய அடிப்படையிலும் திருப்தி
தரக்கூடிய வேலையாக இது இருக்கும். இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் திறமையைப்
பொறுத்து ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 21 லட்சம் வரை ஊதியம் பெறும்
வாய்ப்புகள் உள்ளன.
வெப் டெவலப்பர்/டிசைனர்
இந்த வேலையில் தொழில் நுட்பத் திறமையும், கிரியேடிவிடியும்
சரிபாதி கலந்திருக்கின்றன. கலை, விளம்பரம், இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் மற்றும்
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது பொருத்தமாக
இருக்கும்.
கிராபிக்ஸ் மற்றும் எச்.டி.எம்.எல்., டூல்களைப் பற்றிய
திறமை, கிரியேடிவிடி, டிசைன் மற்றும் லேஅவுட்டுகளை உருவாக்குவதில் திறமை
போன்றவை இந்தப் பணியில் தேவைப்படும்.
ஒரு இணையதளத்தை உருவாக்குவதில் உள்ள தொழில் நுட்ப மற்றும்
கிராபிக்ஸ் தொடர்பான கோடுகளை உருவாக்குதல் இந்த வேலையின் முக்கிய
பகுதியாகும். இவர்களே ஒரு இணையதளத்தின் டிசைன், லேஅவுட் மற்றும் கோடிங்
தொடர்புடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.
கேட்பதற்கு மிக எளியதாகத் தோன்றினாலும், நமது
வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் வடிவமைத்துக் கொடுப்பது சவால்கள்
நிறைந்த ஆனால் திறமையை வெளிக்காட்டுவதற்கேற்ற வேலையாக இருக்கும். இந்தப்
பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கும்
வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment