நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட,
ஒன்பது தென் மாவட்டங்களில், 18,650 ஏக்கரில், ஒன்பது தொழில் பூங்காக்கள்
அமைக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சிவகங்கை: மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்துடன் கூடுதலாக,
2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் இடம்
பெறும் வகையில், புதிய தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
ராமநாதபுரம்: பெட்ரோலிய சுத்திகரிப்பு, ரசாயனம், உரம் போன்ற
தயாரிப்பு தொழிற்சாலைகளுக்காக, 2,000 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா
அமைக்கப்படும்.
புதுக்கோட்டை: பொறியியல், உலோகத் தொழிற்சாலைகள் மற்றும் உலர் தோல் தொழில் பூங்கா, 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும்.
திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு
பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா, 1,500 ஏக்கரில்
அமைக்கப்படும்.
தேனி: 2,000 ஏக்கரில், உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
விருதுநகர்: பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கான
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், உணவுப் பதப்படுத்துதல், பொறியியல்
மற்றும் அச்சுத் தொழிற் கூடங்கள் கொண்ட தொழில் பூங்கா, 3,400 ஏக்கரில்
உருவாக்கப்படும்.
தூத்துக்குடி: கடல்சார் தொழில்கள், கப்பல் கட்டுதல் மற்றும்
பழுது நீக்கும் தொழிற்சாலைகள், கனரக பொறியியல் உலோகத் தொழில் மற்றும்
ரசாயன தொழில்கள் ஆகியவற்றை ஈர்க்கும் வகையில், 6,000 ஏக்கரில் சிப்காட்
தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
நெல்லை: ஒளி மின் தகடுகள், சூரிய ஒளி சேகரிப்பான்கள்
மற்றும் இதர புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான இயந்திரங்கள், கருவிகள்,
வீட்டு உபயோக சாதனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா, 1,500
ஏக்கரில் உருவாக்கப்படும். இப்பூங்கா, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி
கேந்திரமாக அமையும்.
கன்னியாகுமரி: கடல்சார் தொழிற்சாலைகளை ஈர்க்கும் வகையில்,
250 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும். இவற்றோடு, பொறியியல் சார்ந்த
தொழில்கள், ரப்பர் தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தொழில்களும்
ஊக்கவிக்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment