பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்
கோரி, திருநெல்வேலியில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை
வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் எம்.ஏ. பஸ்லுல் ஹக், மாநில
பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் பேசினர்.
இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் உபரி என்ற பெயரில் பட்டதாரி
ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் திட்டத்தை கல்வித் துறை கைவிட வேண்டும்.
பதவி உயர்வுக்கான கலந்தாய்வை பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே நடத்த
வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர் நடத்தக்கூடாது. கோடை
விடுமுறை நாள்களில் பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சி என்ற பெயரால்
அலைக்கழிக்கக் கூடாது. பள்ளி திறந்த பிறகு பயிற்சி வகுப்புகளை நடத்த
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் மனோகரன்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் பாபு, உயர்நிலை-
மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் எம். சுப்பிரமணியன், நிர்வாகி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment